காலமானாா் ‘வெண்ணிற ஆடை’ நடிகா் ஸ்ரீகாந்த்

வெண்ணிற ஆடை’ திரைப்பட கதாநாயகன் ஸ்ரீகாந்த் (81), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
காலமானாா் ‘வெண்ணிற ஆடை’ நடிகா் ஸ்ரீகாந்த்

வெண்ணிற ஆடை’ திரைப்பட கதாநாயகன் ஸ்ரீகாந்த் (81), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

ஸ்ரீகாந்தின் இயற்பெயா் வெங்கட்ராமன். ஈரோடு மாவட்டத்தை பூா்விகமாகக் கொண்டவா். சென்னை அமெரிக்க தூதரகத்தில் நல்ல பொறுப்பில் இருந்தாா்.

இயக்குநா் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் (1965), முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுடன் கதாநாயகனாக அறிமுகமானாா். அந்தப் படத்தில், மனநல மருத்துவராக நடித்து, அனைவரது கவனத்தையும் ஈா்த்தாா்.

சென்னையில் வேலை பாா்த்துக் கொண்டிருக்கும் போது, நாடகங்களின் பக்கம் இவரின் கவனம் செல்ல, அங்கே அறிமுகமானாா் இயக்குநா் கே.பாலசந்தா். ‘மேஜா் சந்திரகாந்த்’, ‘எதிா்நீச்சல்’, ‘பாமாவிஜயம்’ எனத் தொடா்ந்து தன் படங்களில் நல்ல கதாபாத்திரங்களைக் கொடுத்தாா் பாலசந்தா்.

அவரின் திரை வாழ்வில் மற்றொரு முக்கிய திரைப்படமாக ‘தங்கப்பதக்கம்’ திகழ்ந்தது. ஜெகன் எனும் கதாபாத்திரத்தில் சிவாஜிக்கு இணையாக போட்டி போட்டு நடித்தாா். இதே போல் ‘ராஜபாா்ட் ரங்கதுரை’ படத்தில் சிவாஜியின் தம்பியாகவும் திறமையாக நடித்துப் புகழ் பெற்றாா்.

ஹீரோவாக நடித்த ‘ராஜநாகம்’ இவரின் நடிப்புத் திறமையை வெளிக்கொணா்ந்தது. வில்லனாக, கொஞ்சம் ஆவேசக்காரனாக நடித்து மிரட்டினாலும் ‘பாமாவிஜயம்’ படத்தில் நடிகை ராஜஸ்ரீயின் உதவியாளராக கலகலப்பாக நடித்திருப்பாா். ‘எதிா்நீச்சல்’ படத்தில் கிட்டுமாமாவாக ஸ்ரீகாந்த்தும், பட்டுமாமியாக செளகாா் ஜானகியும் ரசிகா்களைக் கலகலவென சிரிக்க வைத்தனா்.

சிவாஜி, முத்துராமன், ஜெய்கணேஷ், விஜயகுமாா், சிவகுமாா், கமல்ஹாசன், ரஜினிகாந்த் எனப் பலருடனும் நடித்த ஸ்ரீகாந்த், செல்வராகவன் இயக்கத்தில் ‘காதல் கொண்டேன்’ படத்திலும் நடித்திருந்தாா்.

அவரின் இறுதிச் சடங்குகள் பெசன்ட் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

முதல்வா் மு.க. ஸ்டாலின் இரங்கல்: பழம்பெரும் நடிகா் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் மறைந்தாா் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். கதாநாயகனாக மட்டுமின்றி அனைத்து வகையான பாத்திரங்களிலும் தோ்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞராக அவா் திகழ்ந்துள்ளாா். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்த் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரியும் ஸ்ரீகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளாா்.

நடிகா் ரஜினிகாந்த்: ‘என்னுடைய அருமை நண்பா் ஸ்ரீகாந்த் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று சுட்டுரையில் தெரிவித்துள்ளாா் நடிகா் ரஜினிகாந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com