வீட்டிலேயே 5 வாக்குகள் இருந்தும் 1 வாக்கு வாங்கியது ஏன்? பாஜக பிரமுகர் விளக்கம்

கோவையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட பாஜக பிரமுகர் கார்த்திக்கிற்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்திருந்தது நேற்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.
வீட்டிலேயே 5 வாக்குகள் இருந்தும் 1 வாக்கு வாங்கியது ஏன்? பாஜக பிரமுகர் விளக்கம்
வீட்டிலேயே 5 வாக்குகள் இருந்தும் 1 வாக்கு வாங்கியது ஏன்? பாஜக பிரமுகர் விளக்கம்

கோவையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட பாஜக பிரமுகர் கார்த்திக்கிற்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்திருந்தது நேற்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.

கார்த்திக் வீட்டிலேயே ஐந்து வாக்குகள் இருந்தும், அவருக்கு ஒரே ஒரு வாக்குதான் கிடைத்திருந்தது என்பது குறித்து, சமூக தளங்களில் பல்வேறு விதமான விமரிசனங்களும் எழுந்தன.

கோவை மாவட்டத்தில் 1 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 2 ஊராட்சித் தலைவர், 10 ஊராட்சிக வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

இதில் பெ.நா.பாளையம் வட்டாரம், குருடம்பாளையம் ஊராட்சி 9 ஆவது வார்டு உறுப்பினர் பதிவிக்கு போட்டியிட்ட பாஜக பிரமுகர் கார்த்திக்கிற்கு ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. அவரது வீட்டில் 5 ஓட்டுகள் இருந்தும் அவருக்கு ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்திருந்தது.

குருடம்பாளையம் ஊராட்சி 9 ஆவது வார்டில் 1,551 வாக்களர்கள் உள்ளனர். இதில் தேர்தலில் 930 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இதில் திமுக ஆதரவில் அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மேலும் சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 ஓட்டுகளும், அதிமுக பிரமுகர் வைத்திலிங்கம் 196 ஓட்டுகளும், சுயேச்சை வேட்பாளர் கந்தேஸ் 84 ஓட்டுகளும், தேமுதிக பிரமுகர் ரவிக்குமார் 2 ஓட்டுகளும், பாஜக பிரமுகர் கார்த்திக் 1 ஓட்டும் பெற்றிருந்தனர்.

இது குறித்து சுட்டுரையில் பதிவிட்டிருந்த சமூக ஆர்வலர் மீனா கந்தசாமி, பாஜக வேட்பாளருக்கு உள்ளாட்சித் தேர்தலில் ஒரே ஒரு வாக்குக் கிடைத்திருக்கிறது. அவரது வீட்டிலிருக்கும் மற்ற 4 பேரும் வேறு ஒருவருக்கு வாக்களித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

கார்த்திக்கின் பிரசார போஸ்டர்களையும் சிலர் சுட்டுரையில் பதிவிட்டு, இவ்வளவு போஸ்டர் அடித்தும் ஒரே ஒரு ஓட்டுதான் கிடைத்தது என்றும் விமரிசித்திருந்தனர்.

இது குறித்து கார்த்திக் அளித்த விளக்கம் என்னவென்றால், நான் இந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவில்லை. சுயேச்சையாக கார் சின்னத்தில் போட்டியிட்டேன். எனது குடும்பத்தில் நான் மற்றும் 4 வாக்குகள் உள்ளன. ஆனால், அவை 4வது பஞ்சாயத்து வார்டில் உள்ளன. நான் போட்டியிட்டது 9வது வார்டில். எனக்கோ, என் குடும்பத்துக்கோ 9வது வார்டில் வாக்கு இல்லை. ஆனால், உண்மைக்கு மாறாக, நான் பாஜக சார்பில் போட்டியிட்டேன் என்றும், எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே எனக்கு வாக்களிக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அது உண்மையில்லை என்று கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com