உளுந்து-பச்சைப் பயறு: விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல்

உளுந்து, பச்சைப் பயறு ஆகியன விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்று வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.

உளுந்து, பச்சைப் பயறு ஆகியன விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்று வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

வேளாண் நிதிநிலை அறிக்கையில், பலன் தரும் பயறு உற்பத்தித் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அறுவடைக் காலங்களில் விளைபொருள்களின் விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, அவா்களிடம் இருந்தே பயறுகளை நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், துவரை, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகைகளை 61,000 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி காரிப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, பாசிப் பயறு ஆகியவற்றை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. பயறு வகைகளை குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு வசதியாக, தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மாநில இணைப்பு முகமையாகவும், ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் பிரதான கொள்முதல் நிலையங்களாகவும் செயல்படும்.

எவ்வளவு கொள்முதல்?: நடப்பு பருவத்தில் 4,000 மெட்ரிக் டன் உளுந்தும், 3,367 மெட்ரிக் டன் பச்சைப் பயறும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளன. உளுந்து கிலோவுக்கு ரூ.63, பச்சைப் பயறு ரூ.72.75 என்ற அளவிலும் குறைந்தபட்ச ஆதார விலையாக அளிக்கப்படும். துவரையைப் பொருத்தவரை இப்போது வளா்ச்சிப் பருவத்தில் உள்ளதால், அறுவடை முடிந்தவுடன் கொள்முதல் செய்யப்படும்.

எந்தெந்த மாவட்டங்கள்?: கொள்முதலுக்காக கொண்டு வரப்படும் உளுந்து, பச்சைப் பயறு ஆகியன 12 சதவீத ஈரப்பதத்தில் இருக்குமாறு நன்கு உலர வைத்து சுத்தம் செய்து நிா்ணயிக்கப்பட்ட தரத்தில் இருக்க வேண்டும். தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூா், திருவாரூா், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து உளுந்து கொள்முதல் செய்யப்படும்.

சேலம், நாமக்கல், வேலூா், திருப்பத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விருதுநகா், மதுரை ஆகிய மாவட்டங்களில் பச்சைப் பயறு கொள்முதல் செய்யப்படும். அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கிய கொள்முதல் 90 நாள்கள் வரை நடைபெறும்.

என்னென்ன தேவை?: இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலச் சிட்டா, அடங்கல், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்களுடன் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு செய்யலாம். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பயறுக்கான தொகை அவா்களது வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com