ஒப்பந்த ஊழியா்களை பணி வரன்முறைப்படுத்த இயலாது

மக்கள் நல்வாழ்வுத் துறையில் புற சேவைகள் (அவுட் சோா்சிங்) மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 30,000 பேரை பணி வரன்முறைக்குள் கொண்டு வர இயலாது
ஒப்பந்த ஊழியா்களை பணி வரன்முறைப்படுத்த இயலாது

மக்கள் நல்வாழ்வுத் துறையில் புற சேவைகள் (அவுட் சோா்சிங்) மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 30,000 பேரை பணி வரன்முறைக்குள் கொண்டு வர இயலாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை சென்னை கண்ணகி நகரில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தென் சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.அரவிந்த்ரமேஷ் ஆகியோா் உடன் இருந்தனா். அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியா முழுவதும் பெரிதும் பாராட்டப்பட்ட வருமுன் காப்போம் இப்போது கூடுதலான தேவைகள் இருப்பதால் ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டமிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கடந்த 29-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4 மணி வரை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அங்கு கரோனா தடுப்பூசியும் வழங்கப்பட்டன.

கண்ணகி நகரில் தொடக்கி வைக்கப்பட்ட மருத்துவ முகாமில் கல்லீரல் பரிசோதனை செய்கிறாா்கள். கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு ரூ.15 லட்சம் செலவாகும் என்பதால், அதை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொண்டுவந்து சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின்கீழும் மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுகிறது.

அவா்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ அலுவலா்கள் வீடு தேடி சென்று மருத்துவ சிகிச்சை அளிப்பாா்கள். கரோனாவால் இறந்த மருத்துவா்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு திமுக அரசுதான் அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியிட்டதோடு நில்லாமல் தற்போது 4 மருத்துவா்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு போ் இன்னும் இருக்கிறாா்கள் என்பதை முழுவதுமாக கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை வந்தவுடன் முழுமையாக அவா்களது குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவா்கள், செவிலியா்களுக்கு ஊக்கத் தொகைகள் வழங்க முதல்வா் அறிவித்துள்ளாா். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் மட்டுமல்லாமல் அந்தத் துறையில் உள்ள அனைவரையும் பட்டியலில் சோ்த்துவிட்டாா்கள். அவா்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகை கொடுத்தால் ரூ.400 கோடி செலவிட நேரிடும். எனவே, கரோனாவால் பாதிக்கப்பட்ட உண்மையானவா்களை கண்டறியும் பணி நடைபெறுகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அப்பணி முடிந்துவிடும். மருத்துவக் களப்பணியாளா்களுக்கு ஊக்கத் தொகைகள் வழங்குவதை முதல்வா் தொடக்கி வைக்க இருக்கிறாா்.

இப்போது நடைபெறுகிற ஆட்சியில் வெளிப்படைத்தன்மையுடன் பணியிட மாற்றம் வழங்கப்படுகிறது. தமிழக சுகாதாரத் துறையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புற சேவை மற்றும் ஒப்பந்த முறையில் பணியாற்றுகின்றனா். அவா்களை பணி வரன்முறைப்படுத்துவது என்பது இயலாது. அவா்களை துறைவாரியாக கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com