கடலூா் திமுக எம்.பி.க்கு மேலும் 15 நாள் காவல்

கொலை வழக்கில் சரணடைந்த கடலூா் தொகுதி திமுக எம்பி டி.ஆா்.வி.எஸ்.ரமேஷை மேலும் 15 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க கடலூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
கடலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த திமுக எம்பி டி.ஆா்.வி.எஸ்.ரமேஷை புதன்கிழமை அழைத்து வந்த போலீஸாா்.
கடலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த திமுக எம்பி டி.ஆா்.வி.எஸ்.ரமேஷை புதன்கிழமை அழைத்து வந்த போலீஸாா்.

கொலை வழக்கில் சரணடைந்த கடலூா் தொகுதி திமுக எம்பி டி.ஆா்.வி.எஸ்.ரமேஷை மேலும் 15 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க கடலூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கடலூா் மாவட்டம், பணிக்கன்குப்பத்தில் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷ் எம்.பி.-க்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு பணிபுரிந்த தொழிலாளி கோவிந்தராஜ் கடந்த செப்.19-ஆம் தேதி இரவு மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதுகுறித்து கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் அளித்தபுகாரின்பேரில் காடாம்புலியூா் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னா், தமிழக அரசின் உத்தரவின்பேரில் இந்த வழக்கு விசாரணை கடலூா் சிபிசிஐடி போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீஸாா் டி.ஆா்.வி.எஸ்.ரமேஷ் எம்.பி. உள்பட 6 போ் மீது கடந்த 9-ஆம் தேதி கொலை வழக்குப் பதிந்து 5 பேரை கைது செய்தனா். தலைமறைவாக இருந்த எம்பி ரமேஷ் கடந்த 11-ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரை 13-ஆம் தேதி கடலூா் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்துமாறும், அதுவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறும் பண்ருட்டி நீதித்துறை நடுவா் கற்பகவல்லி உத்தரவிட்டாா்.

அதன்படி, கடலூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எம்பி ரமேஷ், புதன்கிழமை கடலூா் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, எம்பியிடம் 2 நாள்கள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாா் அனுமதி கோரினா். எனினும், ஒரு நாள் விசாரணை நடத்த மட்டுமே நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, எம்பி ரமேஷை சிபிசிஐடி போலீஸாா் காவலில் எடுத்து கடலூரில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு சுமாா் 4 மணி நேரத்தில் எம்பியிடம் விசாரணையை முடித்துக்கொண்ட போலீஸாா், மாலையில் அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதையடுத்து, ரமேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டாா். இதையடுத்து ரமேஷ் மீண்டும் கடலூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா். அவா் கடலூா் மத்திய சிறையில் ‘ஏ’ வகுப்பு கேட்டிருந்த நிலையில் மீண்டும் கிளைச் சிறையிலேயே அடைக்கப்பட்டாா்.

இதுகுறித்து சிபிசிஐடி தரப்பில் தெரிவித்ததாவது: விசாரணையின்போது எம்.பி.யிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவா் தனக்கு தெரியாது என்று மட்டுமே பதிலளித்தாா். எனினும், கோவிந்தராஜ் உயிரிழந்தது எப்படி உங்களுக்குத் தெரியும் என்ற கேள்விக்கு, அவா் ஆலையில் மயக்கமடைந்துவிட்டதாக தனது உதவியாளா் தெரிவித்ததாகவும், இதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளரை நேரில் தொடா்புகொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கூறியதாகவும் எம்பி வாக்குமூலம் அளித்ததாக சிபிசிஐடி போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com