
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்ப்டடுள்ள நாகை மீனவர்களுக்கு வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு. கோப்புப்படம்.
நாகப்பட்டினம்: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் சென்ற நாகை மாவட்டத்தை சேர்ந்த 23 மீனவர்களையும் வரும் 28 ஆம் தேதி வரை காரைநகர் கடற்படை முகாமில் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை, திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் இ.சிவக்குமார்(48). இவரது சகோதரர் சிவனேசன் (42). இவர்களுக்குச் சொந்தமான இரு விசைப் படகுகளில் நாகை அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, ஆர்யநாட்டுத் தெரு மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 23 பேர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.
இதையும் படிக்க | தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? 8ம் வகுப்பு முடித்தவர்கள்
கடந்த 11-ஆம் தேதி நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்புக்குப் புறப்பட்ட அவர்கள், புதன்கிழமை இரவு இலங்கை, பருத்தித்துறைக்கு தென்கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கடந்த புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும், வியாழக்கிழமை காலை இலங்கை, காரைநகர் துறைமுகத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அங்கு, மீனவர்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்படுவர் எனக் கூறப்பட்டது.
இதையும் படிக்க | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்
இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 23 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் 23 பேரையும் வரும் 28 ஆம் தேதி வரை காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தி காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகள் மயிலட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.