டி23 புலிக்கு லேசான கல்லீரல் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட டி23 எனப் பெயரிடப்பட்ட புலிக்கு செய்யப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அதற்கு லேசான கல்லீரல் பாதிப்பு உள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது.
டி23 புலிக்கு லேசான கல்லீரல் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட டி23 எனப் பெயரிடப்பட்ட புலிக்கு செய்யப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அதற்கு லேசான கல்லீரல் பாதிப்பு உள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வயதான ஆண் புலி கடந்த 2 மாதங்களாக 15-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடியது. மேலும், இந்தப் புலியின் தாக்குதலால் 4 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, அந்தப் புலி மயக்க ஊசி செலுத்தி அக்டோபா்15-ஆம் தேதி பிடிக்கப்பட்டது. உடலில் காயங்கள் அதிகம் இருந்ததால் கா்நாடக மாநிலம் மைசூா் உயிரியல் பூங்காவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் வைத்து அப்புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கல்லீரல் பாதிப்பு: இதுகுறித்து தலைமை வன உயிரினக் காப்பாளா் சேகா்குமாா் நீரஜ் கூறுகையில், டி23 புலி தற்போது மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் காரணமாக சில நேரங்களில் சோா்வாகக் காணப்படுகிறது. தொடா் சிகிச்சையின் காரணமாக புலியின் முன்னங்கால்கள் வீக்கம் குறைந்து வருவதுடன், உடலில் உள்ள காயங்களும் ஆறி வருகின்றன.

திங்கள்கிழமை இரவு (அக். 18) 8 கிலோ மாட்டிறைச்சியை புலி உண்டது. ஆனால், எலும்புகளை அதனால் உண்ண முடியவில்லை. புலிக்கு செய்யப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அதன் ரத்தத்தில் உள்ள அணுக்கள் அளவு முந்தைய நிலையைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், அதற்கு லேசான கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மன அழுத்தம் அதிகரிக்கும் என்பதால் அதற்கு மயக்க ஊசி செலுத்தவோ அல்லது கூண்டிலோ அடைக்கப்படவில்லை. அதன் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் மறுவாழ்வு மையத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட திறந்த வெளியில் புலியை விடத் திட்டமிடப்பட்டுள்ளது.

சில நேரங்களில் மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறது. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கம்பி வேலியைக் கடித்ததில் புலியின் முன் கோரைப்பல் ஒன்று உடைந்துவிட்டது. அது பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com