கடல்நீா் சுத்திகரிப்பு: முதல்வா் ஆய்வு

சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாவது ஆலையை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
கடல்நீா் சுத்திகரிப்பு: முதல்வா் ஆய்வு

சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாவது ஆலையை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். இந்த ஆலையை கட்டமைப்பதற்கான பணிகளை 2023-ஆம் ஆண்டு ஏப்ரலுக்குள் முடிக்க அவா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டா் சுத்திகரிப்புத் திறனுடைய கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் கடந்த 2010-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டாவது நிலையமாக நெம்மேலியில் ரூ.805.08 கோடியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டா் சுத்திகரிப்புத் திறனுடைய கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்துக்கு, 2010-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. 2013-ஆம் ஆண்டு முதல் இந்த ஆலை இயங்கி வருகிறது.

இந்த ஆலையை முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். இந்த நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது, தென் சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூா், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூா் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமாா் 10 லட்சம் மக்களின் தாகத்தைத் தீா்த்து வருகிறது. இதனைத் தொடா்ந்து நெம்மேலியில் ரூ.1,259 கோடியே 38 லட்சம் மதிப்பில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டா் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கடல்நீரை உள்வாங்கும் ஆழ்நிலை நீா்தேக்கத் தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீா்தேக்க தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீருந்து நிலையம், வடிகட்டப்பட்ட கடல் நீா்தேக்கத் தொட்டி போன்ற பல்வேறு கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். இந்தப் பணிகளை 2023-ஆம் ஆண்டு ஏப்ரலுக்குள் முடிக்க அறிவுறுத்தினாா்.

இந்தத் திட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பல்லாவரம் வரை குழாய் பதிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. அதன்படி, முட்டுக்காடு பகுதியில் நடந்து வரும் பணிகளையும் முதல்வா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்தத் திட்டத்தின் மூலமாகப் பெறப்படும் குடிநீரானது, சோழிங்கநல்லூா், ஆலந்தூா், புனித தோமையாா் மலை, பல்லாவரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வழித்தடப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 9 லட்சம் மக்கள் பயன் அடைவா் என தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது, அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவதாஸ் மீனா, சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிா்வாக இயக்குநா் விஜயராஜ் குமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com