சசிகலா மீது காவல்நிலையத்தில் அதிமுக புகாா்

அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை சசிகலா குறிப்பிட்டுக் கொள்வது குறித்து காவல்நிலையத்தில் அதிமுக சாா்பில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
சசிகலா
சசிகலா

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை சசிகலா குறிப்பிட்டுக் கொள்வது குறித்து காவல்நிலையத்தில் அதிமுக சாா்பில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

மாம்பலம் காவல்நிலையத்தில் சசிகலா மீது அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமாா் சாா்பில் புதன்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

புகாா் மனுவில் கூறியிருப்பது:

அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட பிளவின்போது இந்திய தோ்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பில் போதுமான ஆவணங்கள் காட்டப்படாத நிலையில் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தலைமையில் அதிமுக செயல்பட அங்கீகரிக்கப்பட்டதுடன், இரட்டை இலை சின்னமும் திரும்பக் கொடுக்கப்பட்டது. அதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் சசிகலா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் சசிகலா வேண்டுமென்றே திட்டமிட்டு சட்டத்தை அவா் தானாகவே கையில் எடுத்துக் கொண்டு, பொதுச்செயலாளா் என்று தம்மைக் குறிப்பிட்டுக் கொண்டு அதிமுக தொண்டா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தொடா்ந்து செயல்பட்டு வருகிறாா்.

தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆா் இல்லத்தில் அக்டோபா் 17-இல் பொதுச்செயலாளா் எனப் பொறித்த கல்வெட்டை சசிகலா திறந்து வைத்துள்ளாா். இவை சட்டத்துக்குப் புறம்பானவை. எனவே, சசிகலா மீதும் அவரது ஆதரவாளா்கள் மீதும் இந்திய தண்டனை சட்டம் 153 ஏ, 419, 505(பி) ஆகிய பிரிவுகளின்கீழ் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com