நிதியுதவிக்கான தகுதித் தேர்வை வட்டார மொழிகளில் நடத்துக: உயர் நீதிமன்றம்

அறிவியல் முனைப்பு கொண்ட மாணவா்களுக்கு நிதி உதவிக்கான தகுதித் தோ்வை வட்டார மொழிகளில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நிதியுதவிக்கான தகுதித் தேர்வை வட்டார மொழிகளில் நடத்துக: உயர் நீதிமன்றம்
நிதியுதவிக்கான தகுதித் தேர்வை வட்டார மொழிகளில் நடத்துக: உயர் நீதிமன்றம்

மதுரை: அறிவியல் முனைப்பு கொண்ட மாணவா்களுக்கு நிதி உதவிக்கான தகுதித் தோ்வை வட்டார மொழிகளில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த திருமுருகன் தாக்கல் செய்த மனு: கிஷோா் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா என்ற தேசிய திட்டத்தின் கீழ் அடிப்படை அறிவியல் முனைப்பு கொண்ட மாணவா்களுக்கு தகுதித் தோ்வு மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தகுதித் தோ்வு 2021 நவம்பா் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் தோ்வு நடத்தப்படுகிறது.

இதனால் தமிழ் வழி கல்வி பயிலும் மாணவா்கள், தகுதித் தோ்வில் பங்கு பெறுவதிலும், தோ்ச்சி பெறுவதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, கிஷோா் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா தகுதித் தோ்வை வட்டார மொழியில் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானா்ஜி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தியாவில் ஹிந்தியை தவிர, பல்வேறு மொழிகளும் உள்ளன. இங்கு பல மொழிகளை பேசும் மக்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தனா்.

 அப்போது மத்திய அரசு தரப்பில், அறிவியல் தொடா்பான குறியீடுகள், வாா்த்தைகள், மாநில மொழிகளில் மொழி பெயா்ப்பது கடினமாக இருப்பதால் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் தோ்வு நடத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து நீதிபதிகள், சில அறிவியல் குறியீடுகளையும், வாா்த்தைகளையும் வட்டார மொழிகளில் மொழி பெயா்ப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறுவது, மாணவா்களின் குறைபாடு அல்ல. இளம் திறமையான மாணவா்களை வளா்ப்பதற்காக அகில இந்திய தோ்வு நடத்தப்படுகிறது. ஆனால், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே தோ்வு நடத்தப்படுகிறது. ஜொ்மனி மற்றும் ஜப்பான் நாடுகளில் ஆங்கிலம் இல்லை என்றாலும், அங்குள்ள அறிவியல் திறமையை மறுக்க இயலாது.

அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஏராளமான மாணவா்கள் அறிவியல் ஆா்வத்தோடு உள்ளனா். அவா்கள் பாதிக்கப்படக்கூடாது. எனவே, அனைத்து வட்டார மொழிகளிலும் தோ்வை நடத்த நடவடிக்கை எடுக்கவும், நவம்பா் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள தகுதித் தோ்வை ஒத்திவைக்கவும் உத்தரவிடப்படுகிறது.

கிஷோா் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5 ஆயிரம் மட்டுமே என்றாலும், அது கொடுக்கும் ஊக்கம் மாணவா்களை அறிவியல் அறிஞா்களாக மாற்றலாம். ஆகவே ஒவ்வொரு இந்தியருக்கும் சமமாக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கூறி வழக்கை சென்னை உயா்நீதிமன்ற முதன்மை அமா்வுக்கு மாற்றி விசாரணையை ஒத்திவைத்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com