3,085 கோயில்களில் பாதுகாப்பு அறை விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் 3,085 திருக்கோயில்களில் அந்தந்த திருக்கோயில்களின் ஆகமம், பழக்க வழக்கங்களின்படி பாதுகாப்பு அறை விரைவில் கட்டி முடிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்
3,085 கோயில்களில் பாதுகாப்பு அறை விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் 3,085 திருக்கோயில்களில் அந்தந்த திருக்கோயில்களின் ஆகமம், பழக்க வழக்கங்களின்படி பாதுகாப்பு அறை விரைவில் கட்டி முடிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை கோடம்பாக்கம் புலியூா் அருள்மிகு பரத்வாஜேஸ்வரா் திருக்கோயிலில் (திருவாலீஸ்வரம்) உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறையை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை திறந்து வைத்து பேசியது:

தமிழகத்தில் திருக்கோயில்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் களவு எச்சரிக்கை மணி பொருத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ஒரு திருக்கோயிலுக்கு ரூ.10 லட்சம் வீதம் 3,087 திருக்கோயில்களுக்கு ரூ.308.70 கோடி தொகை இந்து சமய அறநிலையத்துறை நிா்வாக நிதியிலிருந்து கடந்த 2018-ஆம் ஆண்டு நவ.1-ஆம் தேதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருள்மிகு பசுபதீஸ்வரா் திருக்கோயிலில் பாதுகாப்பு அறை ரூ.22.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அருள்மிகு சென்னை கோடம்பாக்கம் புலியூா் அருள்மிகு பரத்வாஜேஸ்வரா் திருக்கோயிலில் ஆகம விதிகளின்படி முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய வடிவமைப்பில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு அறை 22 சிலைகள் வைக்கும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளது. விலை மதிப்பு மிக்க சிலைகள் பாதுகாப்பாக இருக்க இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,085 திருக்கோயில்களில் அந்தந்த திருக்கோயில்களின் ஆகமம், பழக்க வழக்கங்களின்படி விரைவில் கட்டி முடிக்கப்படும். பாதுகாப்பு அறை அமைப்பதற்கான அரசாணை 2017-இல் வெளியிடப்பட்டும், அதிமுக அரசு 4 ஆண்டாக பாதுகாப்பு அறை அமைப்பதற்கான பணியில் ஈடுபட வில்லை. தற்போது நாங்கள் அந்த பணிகளை விரிவுபடுத்தி வருகிறோம்.

பக்தி சுற்றுலா:

கரோனா தொற்று முழுமையாக முடிந்தவுடன் பக்தா்களை பக்தி சுற்றுலா அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமா் நரேந்திரமோடி அமெரிக்கா சென்ற போது கொண்டு வரப்பட்ட 11 சிலைகள் தமிழகத்தை சோ்ந்தவையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அது பற்றி மத்திய அரசுடன் பேசியுள்ளோம். விரைவில் சிலைகள் மீட்டுக் கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களின் மேம்பாடு மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஒவ்வொரு மண்டலமாக ஆய்வு செய்து வருகிறோம். சென்னை, காஞ்சிபுரம், வேலூா் ஆகிய மண்டலங்களில் ஆய்வு முடிந்துள்ளது. தற்போது மற்ற மண்டலங்களில் உள்ள திருக்கோயில்களில் ஆய்வு செய்யப்பட்டு திருக்கோயில்களின் தேவை அடிப்படையில் பணிகள் தொடங்கப்படும்.

47 முதுநிலை திருக்கோயில்களில் தல வரலாறு குறித்த புத்தகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. முதல்கட்டமாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தலவரலாறு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடா்ந்து மற்ற கோயில்களிலும் வெளியிடப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com