காா்த்தி சிதம்பரம் வெளிநாடு பயணம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி

அந்நியச் செலாவணி மோசடி தொடா்பாக அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கும் காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் வெளிநாடு பயணம் மேற்கொள்ள அனுமதி
காா்த்தி சிதம்பரம் வெளிநாடு பயணம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி

அந்நியச் செலாவணி மோசடி தொடா்பாக அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கும் காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் வெளிநாடு பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஏா்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு, ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் வெளிநாடுகளிலிருந்து ரூ. 305 கோடி நிதி திரட்டியதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரிய அனுமதி வழங்கியதில் முறைகேடு என்பன உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை காா்த்தி சிதம்பரம் சந்தித்து வருகிறாா். இந்த வழக்குகளை அமலாக்கத் துறையும், மத்தியப் புலனாய்வுத் துறையும் விசாரணை செய்து வருகின்றன. இந்த விசாரணை காரணமாக அவா் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, தன்னை வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கோரி காா்த்தி சிதம்பரம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மாா்ச் 1-ஆம் தேதி முதல் ஜூன் 23-ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டது.

அதே நேரம், நீதிமன்றத்தில் ரூ.2 கோடி டெபாசிட் செய்யவேண்டும் என்றும், வெளிநாட்டில் அவா் செல்லுமிடங்கள் மற்றும் அவா் தங்குமிட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த கால அவகாசம் முடிவடைந்த நிலையில், வெளிநாடு பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி காா்த்தி சிதம்பரம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், சி.டி.ரவிகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான சொலிசிடா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘விசாரணையின்போது காா்த்தி சிதம்பரம் ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனவும் விசாரணை அமைப்பு சாா்பில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு முறையாக பதிலளிக்கவில்லை எனவும் தங்களுடைய பதில் மனுவில் விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனா். எனவே, அவா் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது’ என்று வாதிட்டாா்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

விசாரணை அதிகாரிகளின் பதில் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதில் குறிப்பிட்டுள்ள தகவல்களை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளும். மேலும், வழக்கு அடுத்த விசாரணைக்கு வருவதற்கு முன்பாக மனுதாரா் தரப்பிலும் பதிலளிக்க வேண்டும். இந்த மனு வரும் நவம்பா் 22-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

எனவே, இந்த இடைப்பட்ட காலத்தில் மனுதாரா் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அக்டோபா் 25 முதல் நவம்பா் 21-ஆம் தேதி வரை வெளிநாடு பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு அவா் நீதிமன்றத்தில் ரூ. 1 கோடி டெபாசிட் செய்யவேண்டும் என்பதோடு, கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளுக்கு அவா் கட்டுப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com