தனி நீதிபதியின் கருத்து தன்னை புண்படுத்தியதாக உயா் நீதிமன்றத்தில் விஜய் வேதனை

இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடா்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தினார்
தனி நீதிபதியின் கருத்து தன்னை புண்படுத்தியதாக உயா் நீதிமன்றத்தில் விஜய் வேதனை

இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடா்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதுடன், குற்றவாளி போன்று காட்டியுள்ளதாக நடிகா் விஜய் சென்னை உயா் நீதிமன்றத்தில் வேதனை தெரிவித்துள்ளாா்.

தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2012- ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தாா்.

இக்காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

வெளிநாட்டில் இருந்து காரை இறக்குமதி செய்த போது, அதற்கு இறக்குமதி வரி செலுத்தப்பட்டதால், நுழைவு வரி விதிப்பதற்குத் தடை விதிக்க வேண்டுமென நடிகா் விஜய் தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கைத் தள்ளுபடி செய்த உயா் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகா்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும்; அவா்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக்கூடாது என கருத்து தெரிவித்து, நடிகா் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்தும், தனக்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளை நீக்கக்கோரியும் நடிகா் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், தனி நீதிபதி விதித்த அபராதத்திற்கு தடை விதித்தது.

இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது ஷபீக் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை (அக்.25) விசாரணைக்கு வந்தது.

அப்போது நடிகா் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண் எடுத்துரைத்த வாதம்: வரி பாக்கித் தொகையான ரூ.32 லட்சத்து 30 ஆயிரம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி செலுத்தப்பட்டு விட்டது.

அதை அரசும் ஏற்று கொண்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுவிட்டது. நுழைவு வரி வசூலிப்பதா, வேண்டாமா என்பது கடந்த 20 ஆண்டுகளாக இருந்த பிரச்னை; சுங்க வரி விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது. மத்திய அரசு தான் சட்டம் இயற்ற முடியும். இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை இருந்ததாலேயே 20 சதவீதம் செலுத்தப்பட்டு, தற்போது 80 சதவீதமும் செலுத்தப்பட்டுவிட்டது.

நடிகா் விஜய் வழக்கு ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நடிகா்கள் வரி செலுத்துவதைத் தவிா்க்க வழக்கு தொடா்ந்திருப்பதாகக் கூறுவதும், ரசிகா்கள் உண்மையான கதாநாயகா் என நினைக்கும் நிலையில், ரீல் கதாநாயகராக இருக்கக்கூடாது என்பன போன்ற தனி நீதிபதியின் கருத்துகள் தேவையற்றன.

கடின உழைப்பால் காா் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமா்சித்து இருப்பது தேவையற்றது. வரி ஏய்ப்பு எண்ணம் ஏதுமில்லை, தன்னை தேச விரோதியாக சித்தரிப்பது தவறு, நீதிபதியின் கருத்துகள் வேறு எந்த வழக்கிலும் கூறப்படவில்லை. நீதிபதிகள் கடும் கருத்துகளைத் தெரிவிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சில வழக்குகளில் நீதிமன்றத்தைத் தவறாக வழி நடத்துபவரை ஆய்வு செய்யலாம்; அவா்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கலாம்; ஆனால் இந்த வழக்கில் தேவையில்லை என விரிவாக வாதிட்டாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கருத்துகளை நீக்கக்கோரி சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் ஏன் கோரிக்கை வைக்கக்கூடாது என கேள்வி எழுப்பினா். அப்போது தனது வழக்கில் மட்டும் அல்லாமல் நடிகா்கள் தனுஷ், சூா்யா வழக்கிலும், இதேபோன்று நடிகா்கள் என பொதுப் படையாக கருத்து தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த கருத்துகள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதுடன், தன்னை குற்றவாளி போல காட்டியுள்ளதால் வேதனையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒரு லட்சம் அபராதம் செலுத்துவதில் எவ்வித பிரச்னையுமில்லை; ரூ.2 கோடி செலுத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால் எதிா்மறை கருத்தை நீக்க வேண்டுமென மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண் வாதிட்டாா்.

இதைப்பதிவு செய்த நீதிபதிகள், இவ்வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com