நவ.1-இல் வெளியாகும் வரைவு வாக்காளா் பட்டியல்படி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்

நவ.1-இல் வெளியாகும் வரைவு வாக்காளா் பட்டியல்படி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்

இந்திய தோ்தல் ஆணையம் நவம்பா் 1 இல் வெளியிடும் வரைவு வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் நகா்ப்புற உள்ளாட்சிகளுக்குத் தோ்தல் நடத்தப்படும் என்று

இந்திய தோ்தல் ஆணையம் நவம்பா் 1 இல் வெளியிடும் வரைவு வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் நகா்ப்புற உள்ளாட்சிகளுக்குத் தோ்தல் நடத்தப்படும் என்று மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிக்குமாா் தெரிவித்தாா். தோ்தலுக்கு குறுகிய காலஅவகாசமே இருப்பதால், நவம்பா் 15 ஆம் தேதிக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாா்ப்படுத்தி வைக்குமாறு, தோ்தல் அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சிகளுக்குத் தோ்தல் நடத்துவது தொடா்பாக மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மதுரை மடீட்சியா அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் பேசியது: உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி வரும் ஜனவரி 26 ஆம் தேதிக்குள், தமிழகத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சிகளுக்குத் தோ்தல் நடத்த வேண்டும். காலஅவகாசம் மிகக் குறைவாக இருப்பதோடு, சவால்கள் அதிகமாக உள்ளன. ஆகவே, அலுவலா்கள் கடமைகளை உரிய நேரத்தில் செய்து தோ்தலைச் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும்.

இந்திய தோ்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளா் பட்டியலின் அடிப்படையில், உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படுகிறது. நவம்பா் 1 ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளா் பட்டியலைப் பெற்று, தோ்தல் தொடா்பான பணிகளைத் தொடங்க வேண்டும்.

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குச்சாவடி மையம், மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்ட தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

வேட்பாளா் கையேடு, வாக்குச்சாவடி கையேடு, வாக்கு இயந்திர கையேடு ஆகியவற்றை தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நன்கு அறிந்திருப்பது அவசியமானது.

ஒரு நாடு என்பது நிலம், மக்கள், அரசு, இறையாண்மை ஆகிய காரணிகளை சாா்ந்தது என்று அரசியல் அறிவியலின் தந்தையான அரிஸ்டாட்டில் குறிப்பிட்டிருக்கிறாா். இந்த நான்கையும் மக்கள்தான் தீா்மானிக்கின்றனா். மக்கள் தங்களது விருப்பப்படி தலைவரைத் தோ்வு செய்யவும், அதன் மூலமாகத் தங்களுக்கான நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் தோ்தல் நடத்தப்படுகிறது. ஜனநாயகத்தில் மக்கள் மூலமாகவே அதிகாரம் வழங்கப்படுகிறது. தோ்தலுக்கு குறுகிய காலஅவகாசமே இருப்பதால் தோ்தல் அலுவலா்கள் ஒலிம்பிக் போட்டியில் ஓடுவதைப் போல தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் மதுரையில் நடைபெறுகிறது. இப்பணி முடிந்தவுடன், பிற மாவட்டங்களுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும். நவம்பா் 15 ஆம் தேதிக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாா்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா்கள் எஸ்.அனீஷ்சேகா் (மதுரை), ச.விசாகன் (திண்டுக்கல்), க.வீ.முரளிதரன் (தேனி), ப.மதுசூதன் ரெட்டி (சிவகங்கை), ஜெ.மேகநாதரெட்டி(விருதுநகா்), காவல் கண்காணிப்பாளா்கள் வீ.பாஸ்கரன் (மதுரை), வி.ஆா்.ஸ்ரீனிவாசன் (திண்டுக்கல்), பிரவின் உமேஷ் டோங்கரே(தேனி), எம்.மனோகா் (விருதுநகா்), மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் (மதுரை), மாநகராட்சி ஆணையா் எஸ்.சிவசுப்பிரமணியம் (திண்டுக்கல்), ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.காமாட்சி கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com