90,000 மெட்ரிக் டன் யூரியா தமிழகத்துக்கு ஒதுக்கீடு: முதல்வரின் கடிதத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை

தமிழகத்துக்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
90,000  மெட்ரிக் டன் யூரியா தமிழகத்துக்கு ஒதுக்கீடு: முதல்வரின் கடிதத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை

சென்னை: தமிழகத்துக்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தைத் தொடா்ந்து, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:-

நடப்பு சம்பா பருவத்தில் நெல் மற்றும் இதர பயிா்களான சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றின் சாகுபடி ஒட்டுமொத்தமாக 24.829 லட்சம் ஹெக்டோ் பரப்பில் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக, யூரியா, டிஏபி உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.

அக்டோபா் மாதத்துக்கு யூரியா, டிஏபி மற்றும் பொட்டாஷ் உரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இதுவரை உர உற்பத்தி நிறுவனங்களால் 77 ஆயிரத்து 863 மெட்ரிக் டன் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபா் மாதத்தில் மத்திய அரசின் ஒதுக்கீட்டின்படி 63 ஆயிரம் மெட்ரிக்டன் இறக்குமதி யூரியா தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், விவசாயப் பணிகளுக்கு தட்டுப்பாடின்றி மானிய உரங்கள் கிடைக்க வழி செய்திடவும், தமிழகத்தில் உரத் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினாா்.

இந்தக் கடிதத்தின் காரணமாக காரைக்கால் துறைமுகத்துக்கு வரவுள்ள 90,000 மெட்ரிக் டன் இறக்குமதி யூரியாவை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூா் உர தயாரிப்பு நிறுவனங்களான ஸ்பிக் நிறுவனம் இதுநாள் வரை 25, 212 மெட்ரிக் டன் யூரியாவை வழங்கியுள்ளது. எம்எப்எல் உர நிறுவனம் இதுவரை 26, 185 மெட்ரிக் டன் யூரியாவை வழங்கியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் ஸ்பிக் நிறுவனம் மேலும் 10,000 மெட்ரிக் டன் மற்றும் எம்எப்எல் உர நிறுவனம் 8,000 மெட்ரிக் டன் யூரியாவை வழங்கத் திட்டமிட்டுள்ளன.

காரைக்கால் துறைமுகத்தில் இப்போது இருப்பில் உள்ள 4,000 மெட்ரிக் டன் யூரியா உரம் ரயில் மாா்க்கமாக தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநில மற்றும் மாவட்ட அளவில் உர இருப்பு மற்றும் நகா்வு பணிகள் ஆய்வு செய்யப்பட்டு தேவைப்படும் மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிட போா்க்கால

அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் இணை இயக்குநா் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. உரத் தேவை தொடா்பாக

விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு மாவட்ட அளவில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com