முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம்: 142 அடி வரை தேக்க அரசு நடவடிக்கை: அமைச்சா் துரைமுருகன் விளக்கம்

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடி வரை தேக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம்: 142 அடி வரை தேக்க அரசு நடவடிக்கை: அமைச்சா் துரைமுருகன் விளக்கம்

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடி வரை தேக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

முல்லைப் பெரியாறு அணையானது கேரளத்துடன் செய்யப்பட்ட 999 ஆண்டு கால ஒப்பந்தப்படி தமிழகத்தால் பராமரிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தமானது இரு மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் என்று வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையானது தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. ஆனால், அணையின் கட்டுப்பாடு கேரளத்திடம் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

தமிழக நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், மழையளவு, அணைக்கு வரும் நீா்வரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அணையின் நீா்மட்டத்தை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அதிகபட்சமாக 142 அடி வரை தேக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. கேரளத்தைச் சோ்ந்த தனிநபா் தொடா்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அந்த உத்தரவில், மாத வாரியாக நிா்ணயிக்கப்பட்டுள்ள அளவுகளின்படி அணையின் நீா் மட்டத்தைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி நீா்மட்டத்தை கணக்கில் கொண்டு, அணையின் இரண்டு மதகுகளைத் திறக்க மதுரை மண்டல நீா்வளத் துறை முடிவெடுத்து, கடந்த 28-ஆம் தேதி காலையில் தமிழக நீா்வளத் துறை பொறியாளா்களால் திறக்கப்பட்டது. இதுகுறித்து, கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.

மதகுகள் திறக்கப்படும் போது கேரள மாநில நீா்வளத் துறை அமைச்சரும், சில அதிகாரிகளும் உடனிருந்து பாா்வையிட்டனா். இதுதான் உண்மை நிலை. ஆனால், கேரள அரசு அதிகாரிகள்தான் அணை மதகுகளைத் திறந்தாா்கள் என சில ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருப்பது தவறானது.

நவம்பா் 30-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட்ட 142 அடி அளவுக்கு அணையில் நீா் வரத்தைப் பொறுத்து அதில் தண்ணீா் தேக்கி வைக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. முல்லைப் பெரியாறு அணையை தமிழ்நாடு அரசுதான் கண்காணித்தும், பராமரித்தும், இயக்கியும் வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com