பிள்ளையார்பட்டியில் சதுர்த்திப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவையொட்டி புதன்கிழமையன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றும் வைபவம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றும் வைபவம்

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவையொட்டி புதன்கிழமையன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
                 
கொடியேற்றத்துடன் சதுர்த்தி பெருவிழா துவங்கி, தொடர்ந்து 10 நாள்கள் திருவிழா நடைபெறும்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா 10 நாள்கள் நடைபெறும். முதல்நாளான புதன்கிழமையன்று காலை 9 மணிக்கு கொடிப்படம் பல்லக்கில் வைக்கப்பட்டு கோயில் வலம் வரப்பட்டது. 
பின்னர் கொடிமரத்தில் கட்டப்பட்டு வெண்பட்டு துணியிலிருந்த மூஷிக படத்திற்கு முன் அங்குசதேவர் சக்கரம் வைக்கப்பட்டு பால் மற்றும் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்களிலிருந்து புனிதநீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. 


பிச்சைக்குருக்கள், சோமசுந்தரக்குருக்கள் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடிபடத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பகல் 11.15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. உற்சவர் மூஷிக வாகனத்திலும் சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் மருதீஸ்வரர் மண்டபத்தில் எழுந்தருளினார்.  2 ஆம் நாளிலிருந்து சுவாமி காலையில் வெள்ளிக்கேடகத்தில் புறப்பாடும், இரவில் திருவீதி உலாவும் நடைபெறும். 

6 ஆம் திருநாளில் கஜமுகசூரசம்ஹாரமும், 9 ஆம் திருநாளில் தேரோட்டமும் நடைபெறுவது வழக்கம். தற்போது கரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி இந்த உற்சவங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் உள்பிரகாரத்தில் ஆகம விதிகளின்படி விழா நடைபெற உள்ளது. தினசரி காலை, இரவு உற்சவர் உட்பிரகார வலம் வருதல் மட்டும் நடைபெறும். 9 ஆம் திருநாளில் மாலையில் மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். விநாயகர் சதுர்த்தியன்று காலை தீர்த்தவாரியும் நண்பகல் முக்குருணி மோதகப் படையலும் இரவில் ஐம்பெரும் கடவுளார் எழுந்தருளலுடன் விழா நிறைவடையும்.

விழா காலங்களில் பக்தர்களின் வருகையைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து நிகழ்ச்சிகளும் இணையதள வாயிலாக நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி .ராமசாமி, வலையபட்டி மு.நாகப்பன், ஆகியோர் செய்துவருகின்றனர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com