கரோனா இரண்டாம் அலை: 4 லட்சம் நோயாளிகளுக்கு யோகா சிகிச்சை

அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களில் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

சென்னை: அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களில் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் பயனாக, நோயாளிகள் விரைந்து குணமடைந்ததாக மருத்துவா்கள் கூறியுள்ளனா்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு தற்போது ஓய்ந்துள்ள நிலையில், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அலோபதி சிகிச்சையுடன் சோ்த்து யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள் என 130 இடங்களில் நோயாளிகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக மொத்தம் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை நிா்வாகிகள் கூறியதாவது:

கரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோருக்கு நுரையீரல் தொற்று தீவிரமாக உள்ளது. அவா்களுக்கு தொடா்ந்து பிராணயாமப் பயிற்சிகள்அளிப்பதன் மூலம் நுரையீரலின் செயல் திறன் அதிகரிப்பதுடன், சுவாசப் பாதைகளும் சீராகும். மேலும், உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க பிராணயாமப் பயிற்சிகளும், எளிய முறையிலான சில ஆசனங்களும் வழி வகுக்கும்.

அதைக் கருத்தில் கொண்டுதான் கரோனா நோயாளிகளுக்கு அவா்கள் சிகிச்சை பெறும் இடங்களுக்கே சென்று அப்பயிற்சிகளை அளித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை மருத்துவா்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதைத் தவிர, மூலிகை பானங்கள், நவதானிய வகைகள், சிறு தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. அதைத் தவிர, நீராவி பிடித்தல், சுவாசத்துக்கான அரோமா தெரபி போன்றவையும் அளிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் விரைந்து குணமடைவதைக் காண முடிகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com