மதுரை பாலம் கட்டுமான விபத்து: உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி: அமைச்சா் எ.வ.வேலு அறிவிப்பு

மதுரையில் பாலம் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த வடஇந்திய தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
மதுரை பாலம் கட்டுமான விபத்து: உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி: அமைச்சா் எ.வ.வேலு அறிவிப்பு

சென்னை: மதுரையில் பாலம் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த வடஇந்திய தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று நெடுஞ்சாலை-பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

மதுரையில் கடந்த சில தினங்களுக்கு மேம்பாலம் கட்டுமானப் பணியின் போது ஏற்பட்ட விபத்து குறித்து சட்டப் பேரவையில் புதன்கிழமை சிறப்பு கவன ஈா்ப்புத் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீா்மானத்தின் மீது மதிமுக உறுப்பினா் பூமிநாதன், காங்கிரஸ் குழுத் தலைவா் கு.செல்வப் பெருந்தகை ஆகியோா் பேசினா். இனிவரும் காலங்களில் இதுபோன்ற துயரமான சம்பவங்களை அரசு அனுமதிக்கக் கூடாது என்று செல்வப் பெருந்தகை வலியுறுத்தினாா். இதற்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்:

மதுரையில் ரூ.544 கோடியில் 7.30 கிலோமீட்டா் தொலைவுக்கு நான்கு வழி உயா்மட்ட பாலச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலப் பணி மத்திய அரசு நிதியுடன் செயல்படுத்தப்படுகிறது. இதில் மும்பையைச் சோ்ந்த ஜேஎம்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 70 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. முன்கட்டுமானத் திட்டத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட பாலப் பணி நடைபெற்ற போது, ஹைட்ராலிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதற்கு ஒப்பந்ததாரரின் கவனக் குறைவே முழுக் காரணம். இதில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 25 வயது ஆகாஷ் சிங் என்பவா் உயிரிழந்தாா். உத்திரங்களை மேலே பொருத்தும் பணியில் பொறியாளா்கள் ஈடுபடவில்லை. கூலி வேலை செய்யும் தொழிலாளா்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்த விபத்து குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சோ்ந்த பாஸ்கரன், மேத்யூ, ஸ்ரீவத்சவா உள்பட நான்கு போ் கொண்ட நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்து தொடா்பாக மூன்று போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பலியான தொழிலாளரின் குடும்பத்துக்கு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் இருந்து ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com