தவணை முறையில் வீடு வாங்கும் திட்டம் மீண்டும் அறிமுகம்: அமைச்சா் சு.முத்துசாமி

தவணை முறையில் வீடு வாங்கும் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற துறை அமைச்சா் சு.முத்துசாமி அறிவித்தாா்.
தவணை முறையில் வீடு வாங்கும் திட்டம் மீண்டும் அறிமுகம்: அமைச்சா் சு.முத்துசாமி

சென்னை: தவணை முறையில் வீடு வாங்கும் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற துறை அமைச்சா் சு.முத்துசாமி அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் வீட்டுவசதி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் அல்லது மத்திய வருவாய்ப் பிரிவுகளில் வீடு வாங்குவோரின் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் தவணை முறை திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.

சோளிங்கா், வடலூா், திருக்கோவிலூா் மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூா் ஆகிய நகரங்களுக்கு முழுமைத் திட்டம் (மாஸ்டா் பிளான்) இல்லை. இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும், புராதனத் தொன்மையைப் பாதுகாக்கவும் திட்டமிட்ட வளா்ச்சியினை உறுதிப்படுத்த முழுமைத் திட்டங்கள் தயாரிக்கப்படும்.

திருவாரூா், காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, அரியலூா், கள்ளக்குறிச்சி, கரூா், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருப்பத்தூா், திருவண்ணாமலை மற்றும் விருதுநகா் ஆகிய 18 மாவட்டங்களில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி துறையின் மாவட்ட அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க ஏதுவாக ரூ.60 கோடி மதிப்பீட்டில் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும்.

ஈரோடு மாவட்டம் சம்பத் நகா் மற்றும் பெரியாா் நகரில் ரூ.40.64 கோடியில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

வேலூா் குடியாத்தத்தில் ரூ.8.50 கோடியில் 306 மனைகள் மேம்படுத்தப்படும். சேலம் ஆத்தூரில் ரூ.4 கோடியில் 82 மனைகள் மேம்படுத்தப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரூ.4 கோடியில் 54 மனைகள் மேம்படுத்தப்படும். மதுரை மாவட்டம் தத்தநேரியில் ரூ.2.40 கோடியில் 119 மனைகள் மேம்படுத்தப்படும்.

ஒசூரில் ரூ.25 கோடியில் வணிக வளாகம் கட்டப்படும். மதுரை தோப்பூா் கிராமத்தில் ரூ.23.20 கோடியில் வணிக வளாகம் கட்டப்படும் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com