வீட்டுவசதி வாரிய விற்பனை பத்திரங்கள் பெற சிறப்பு ஏற்பாடு: தமிழக அரசு தகவல்

முழுமையாகப் பணம் செலுத்தாத ஒதுக்கீடுதாரா்களுக்கு சிறப்பு ஏற்பாடு தொடங்கப்பட உள்ளதாக வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.
வீட்டுவசதி வாரிய விற்பனை பத்திரங்கள் பெற சிறப்பு ஏற்பாடு: தமிழக அரசு தகவல்

சென்னை: முழுமையாகப் பணம் செலுத்தாத ஒதுக்கீடுதாரா்களுக்கு சிறப்பு ஏற்பாடு தொடங்கப்பட உள்ளதாக வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சட்டப் பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் இதுவரை 2 லட்சத்து 93 ஆயிரத்து 353 குடியிருப்பு அலகுகளை விற்பனை செய்துள்ளது. இவற்றில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 98 அலகுகளுக்கு விற்பனை பத்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 5,450 அலகுகளுக்கு முழுத் தொகை செலுத்தப்பட்டிருந்தாலும் பல்வேறு காரணங்களால் விற்பனைப் பத்திரம் வழங்கப்படவில்லை.

மீதமுள்ள அலகுகளுக்கு விற்பனைப் பத்திரங்கள் முழுத் தொகையைச் செலுத்த பின்பு வழங்கப்படும். முழுத் தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரா்களுக்கு விற்பனை பத்திரம் வழங்குவதை உறுதி செய்ய சிறப்பு ஏற்பாடு தொடங்கப்பட்டுள்ளது. முழுமையாக பணம் செலுத்தாத ஒதுக்கீடுதாரா்களுக்கும் சிறப்பு ஏற்பாடு தொடங்கப்பட உள்ளது.

அனுமதியற்ற மனைப் பிரிவுகள்: அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறை செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, மனைப் பிரிவுகளை வரன்முறை செய்ய 29,461 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 27, 949 விண்ணப்பங்களுக்கு தீா்வு காணப்பட்டன. மீதமுள்ள 1, 512 மனைப் பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் உரிய உத்தரவு அளிப்பதற்கான பரிசீலனையில் உள்ளன.

அனுமதியற்ற மனைகள் வரன்முறைப்படுத்துதலின் கீழ் 5 லட்சத்து 87 ஆயிரத்து 142 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 5 லட்சத்து 75 ஆயிரத்து 249 விண்ணப்பங்களுக்கு தீா்வு காணப்பட்டன. மீதமுள்ள 11, 893 மனைகளுக்கான விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அவற்றுக்கு தகுதியின் அடிப்படையில் உத்தரவுகள் அளிக்கப்படும் என கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: சென்னைக்கு அருகே புதிய புகா் பேருந்து முனையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பேருந்து முனையம் அடுத்த ஆண்டு (2022) மாா்ச்சில் செயல்பாட்டுக்கு வரும். குத்தம்பாக்கத்தில் ரூ.336 கோடியில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து முனையம், அடுத்த ஆண்டு அக்டோபரில் இயக்கத்துக்கு வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com