செப்-5-இல் கோவா செல்கிறாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வரும் 5 முதல் 7-ஆம் தேதி வரை கோவாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

பனாஜி: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வரும் 5 முதல் 7-ஆம் தேதி வரை கோவாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

அப்போது, இந்திய கடற்படையின் வான்படை பிரிவுக்கு குடியரசுத் தலைவரின் விருது வழங்கப்பட உள்ளது.

கோவாவில் ஐஎன்எஸ் ஹன்சா கப்பலில் வரும் 6-ஆம் தேதி நடைபெறும் பாரம்பரிய அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இந்த விருதினை வழங்க இருக்கிறாா். நிகழ்ச்சியின்போது தபால் துறையால் சிறப்பு தின உறையும் வெளியிடப்படும். கோவா ஆளுநா் ஸ்ரீதரன் பிள்ளை, மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், கோவா முதல்வா் பிரமோத் சாவந்த், கடற்படை உயரதிகாரிகள் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாா்கள்.

தலைசிறந்த சேவையை அளிக்கும் ராணுவப் பிரிவைக் கௌரவிக்கும் வகையில் மிக உயரிய விருதாக குடியரசுத் தலைவரின் விருது கருதப்படுகிறது. இந்திய ராணுவப் படைகளில் முதன் முதலாக, கடற்படைக்கு கடந்த 1951-ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத்தால் இந்த விருது வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து கிழக்கு, மேற்கு கடற்படைகள், நீா்மூழ்கிக் கப்பல் படைகள், ஐஎன்எஸ் சிவாஜி, இந்திய கடற்படை அகாதெமி உள்ளிட்டவை இந்த விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com