திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்வோர் இந்தத் தவறை செய்ய வேண்டாம்

திருமண தகவல் இணையதளம் மூலம் நெதர்லாந்து டாக்டர் என்று போலி விளம்பரம் செய்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணிடம் பணம் மோசடி செய்த நைஜீரிய கும்பல் புது தில்லியில் கைது செய்யப்பட்டது.
திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்வோர் கவனத்துக்கு..
திருமண தகவல் இணையதளத்தில் பதிவு செய்வோர் கவனத்துக்கு..

திருமண தகவல் இணையதளம் மூலம் நெதர்லாந்து டாக்டர் என்று போலி விளம்பரம் செய்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணிடம் பணம் மோசடி செய்த நைஜீரிய கும்பல் புது தில்லியில் கைது செய்யப்பட்டது.

இதையடுத்து, திருமண தகவல் இணையதளம் மூலம் வரன் தேடுவோர் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரில் திருமண தகவல் இணையதளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்ததாகவும். நெதர்லாந்தைச் சேர்ந்த டாக்டர் முகமதுசலீம் என்பவர் அப்பெண்ணை தொடர்பு கொண்டு பேசியதாகவும். தனக்கு ஒரு பரிசுப் பெட்டகத்தை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு மும்பையிலிருந்து ஒரு பெண் அவரை தொடர்பு கொண்டதாகவும், மேற்படி பரிசுப் பெட்டகத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பதிவு கட்டணம் ரூ.28,000 செலுத்துமாறு வங்கிக் கணக்கை கொடுத்ததாகவும், அதை நம்பி அதில் பணம் செலுத்தியதாகவும், மீண்டும் அந்தப் பெண் தொடர்பு கொண்டு மேற்படி பரிசுப் பெட்டகத்தை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் கரன்சி நோட்டுகள் இருப்பதாகவும் அதற்கு அபராதத் தொகை ரூ.77,000 கட்டச் சொன்னதாகவும் அதையும் அதே வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

மீண்டும் அந்தப் பெண் தொடர்பு கொண்டு யூரோவை பணமாக மாற்றுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டச் சொன்னதாகவும், அதையும் அந்தப் பெண்மணி சொன்ன வங்கிக் கணக்கில் செலுத்தியதாகவும், அந்த பெண்மணி மீண்டும் தொடர்பு கொண்டு வங்கி கணக்கை அப்கிரேடு செய்வதற்கு ரூ.95,000 கட்ட சொன்னதாகவும், அதனால் சந்தேகம் ஏற்பட்டு பணம் கட்ட மறுத்துள்ளார்.

மேற்படி டாக்டர் சலீம் என்பவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக அவரது சகோதரர் என்று கூறி ஆசிப் என்பவர் பேசி மனரீதியாக மிரட்டியதாகவும், மேற்படி பணம் செலுத்தவில்லை என்றால் சட்டரீதியான பிரச்னையை சந்திக்க வேண்டும் என்று மிரட்டியதாகவும், அதனால் மேற்கொண்டு ரூ.40,000 மற்றும் ரூ.55,000ஐ அவர் கொடுத்த வங்கிகணக்கில் செலுத்தியதாகவும் கூறியுள்ளார்.

அதன்பிறகு டாக்டர் சலீம் அவரை தொடர்பு கொண்டு காலதாமதமாக பணம் செலுத்தியதால் தாமதக் கட்டணம் ரூ.20,000 கட்டவேண்டும் என்று சொல்லியதாகவும். அதையும் நம்பி மேற்படி வங்கி கணக்கில் செலுத்தியதாகவும், மறுநாள் டாக்டர் சலீம் அவரை தொடர்பு கொண்டு அவருடைய நண்பர் மேற்படி பெட்டகத்தை  ஒப்படைக்க இந்தியா வந்திருப்பதாகவும். காலதாமதம் ஆகிவிட்டதால் மேற்படி பெட்டகத்துக்கு தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் மேலும் ரூ.50,000- கொடுக்கவேண்டும் என்று கூறிறியுள்ளார்.

ஆர்.பி.ஐ.யில் இருந்து மெயில் வந்திருப்பதாகவும் அதை பார்க்குமாறு கூறியதாகவும், மனுதாரர் அதை பார்த்துவிட்டு போலியாக உள்ளதாகக் கூறியுள்ளார். அதற்கு அவர் பணம் கட்டினால் தான் இந்தியா வருவேன் என்று கூறி விமான பயணத்திற்கு கட்டணம் செலுத்துமாறு கூறியதாகவும், ஆனால் அவர் மேற்படி பணம் கட்ட முடியாது என்று மறுத்தபோது அவரை திட்டிவிட்டு அவரது வாட்ஸ்ஆப்பை தடை செய்து விட்டதாகவும், மீண்டும் தடையை எடுத்து செய்து நகைக்கடன் வாங்கியாவது பணம் கட்டுமாறு கூறியுள்ளார்.

அவரும் அதை நம்பி நகைகளை அடமானம் வைத்து பணம் அனுப்பியதாகவும். அதன் பிறகு ஜூலை மாதம் 17ம் தேதி இந்தியா வருவதாக தெரிவித்ததாகவும். அதன்பிறகு ஒருபெண்மணி தொடர்பு கொண்டு டாக்டர் சலீம் புது தில்லி விமான நிலையத்திற்கு வந்துவிட்டதாகவும் அவர் இந்தியாவில் நுழைவதற்கு பிஐஓ அட்டை இல்லை என்றும் அதற்காக ரூ.1,35,000 பணம் கட்டவேண்டும் என்றும் இல்லை என்றால் மேற்படி சலீம் என்பவர் விமான நிலையத்தில் 14 நாள்கள் இருக்க வேண்டும் என்று கூறியதாகவும். அதன்பிறகு அவருடைய இருப்பிடத்தை அனுப்புமாறு கேட்டதற்கு அவரது எண்ணை தடை செய்துவிட்டதாகவும், மேற்படி நபர்கள் தன்னை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாவும் நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருந்தார்.

மேற்படி புகாரின் பேரில் சென்னை, மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் ஆள்மாறாட்டம்,  மோசடி, இணையவழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது, விசாரணையில் தில்லியில் இருந்து மோசடி கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது, உடனடியாக தனிப்படை காவலர்கள் தில்லி விரைந்துச் சென்று புது தில்லி உத்தம் நகரில் தங்கியிருந்து மேற்படி மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பாலினஸ் சிகேலுவோ வயது 31 மற்றும் சிலிட்டஸ் இகேசுக்வு வயது 23 ஆகியோரை ஆகஸ்ட் 31 அன்று கைது செய்து விசாரணைக்குப் பிறகு அவர்களிடமிருந்து மோசடி செயல்களுக்கு பயன்படுத்திய செல்லிடப்பேசி, மடிக்கணினிகள், வங்கிகணக்கு அட்டைகள் மற்றும் பணம் ரூ.4,30,000 ஆகியவற்றை கைப்பற்றியும், பின்பு அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்கள்.

இன்று  குற்றவாளிகள் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எழும்பூர்) ஆஜர்படுத்தப்படவிருக்கிறார்கள். புலன் விசாரணையில் மேற்படி நைஜீரிய நபர்கள் புது தில்லியில் தங்கியிருந்து கொண்டு முகநூல் போன்ற சமூகவலைதளங்களில் உள்ள மற்றவர்களின் புகைப்படங்கள். தகவல்களை எடுத்து திருமண தகவல் இணையதளங்களில் போலியான பெயர்களில் பதிவு செய்து திருமணத்திற்காக இணையதளம் மூலம் அணுகும் பெண்களை குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதும் வெளிநாட்டைச் சேர்ந்த மேல்தட்டு-பணக்கார மணமகன் என்று நம்ப வைப்பதற்காக வெளிநாட்டு தொலைபேசி எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு பேசிவருவதும் தெரியவந்தது.

மேலும் வெளிநாட்டில் இருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசு பெட்டகத்தை அனுப்பி வைப்பதாக ஆசை காட்டி நம்பவைத்து, பல்வேறு காரணங்களைக் கூறி சிறிது சிறிதாக பணம் கட்டச்சொல்லி பின்பு மோசடி செய்து ஏமாற்றுவது தெரியவந்தது.

எனவே திருமணத்திற்காக இணையதளங்களில் பதிவு செய்யும் பெண்கள் புகைப்படங்கள் மற்றும் அதில் குறிப்பிட்டுள்ள விபரங்களை உண்மை என்று நம்பிக்கொண்டு தங்களது தனிப்பட்ட செல்போன்-வாட்ஸ்ஆப் எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது, மேலும் நேரில் பார்க்காமலும் தீர விசாரிக்காமலும் எக்காரணத்தைக் கொண்டும் பணம் எதுவும் கொடுக்ககூடாது, மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பரிசுப் பெட்டகம் என்று ஆசை காட்டினாலும் ஏமாறக்கூடாது என்று சென்னை காவல் ஆணையாளர்  பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com