இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதிகளில் மழை: மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, சாலைகிராமம் பகுதிகளில்  கொட்டித் தீர்த்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. 
இளையான்குடி அருகே தறிக்கொம்பன் கிராமத்தில் மழையால் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரம்.
இளையான்குடி அருகே தறிக்கொம்பன் கிராமத்தில் மழையால் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரம்.


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, சாலைகிராமம் பகுதிகளில்  கொட்டித் தீர்த்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. 

இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதிகளில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தது. 

இந்நிலையில், இப்பகுதிகளில் திடீரென சாரளாக தொடங்கிய மழை அதன்பின் வலுவடைந்து பலத்த மழையாக மாறியது. நீண்டநேரம் பெய்த இந்த மழையால் இளையான்குடி, சாலைகிராமம் பகுதிகளில் சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து. தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. 

மேலும் மேற்கண்ட பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மின்கம்பங்கள் முறிந்து சாய்ந்தன. இதனால் பல கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. 

சாலைக்கிராமம் பகுதியில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தன.

இளையான்குடி அருகே திருவள்ளூர் கிராமத்தில் மின் கம்பம் முறிந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஒரு மாடு உயிரிழந்தது. இளையான்குடி, சாலைகிராமம் சாலையில் தறிக்கொம்பன் கிராமத்தில் சாலை ஓரங்களில் நின்ற பனை மரங்கள் முழுவதுமாக சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏராளமான கிராமங்களில் காற்றுடன் மழை பெய்ததால் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

இளையான்குடி, சாலைகிராமம் பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது இப்பகுதிகளில் விவசாயிகள் விதைப்பு முறையில் நெல் நடவு செய்துள்ளனர். இந்த மழையால் விதைப்பு செய்யப்பட்ட நெல்விதைகள் முளைக்கத் தொடங்கிவிடும் என விவசாயிகள் தெரிவித்தனர். 
மேலும் இளையான்குடி, சாலைகிராமம் பகுதிகளில் கண்மாய் ஊரணி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து கிடைத்துள்ளது. கால்நடை மேய்ச்சலுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com