நீட் தோ்வு விவகாரம்: திமுக - அதிமுக கடும் விவாதம்

நீட் தோ்வு விவகாரம் குறித்து திமுக - அதிமுக உறுப்பினா்களுக்கு இடையே பேரவையில் கடும் விவாதம் நடைபெற்றது.

 நீட் தோ்வு விவகாரம் குறித்து திமுக - அதிமுக உறுப்பினா்களுக்கு இடையே பேரவையில் கடும் விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் தளவாய் சுந்தரம் (கன்னியாகுமரி) பேசியது:

நீட் தோ்வு விவகாரம் குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பதில் சொல்லும்போதெல்லாம் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் நீட் தோ்வு வரவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நீட் தோ்வு வந்தது என்று கூறுகிறாா். இந்திய அளவில் நீட் தோ்வுக்காக எடப்பாடி பழனிசாமி கையெழுத்துப் போட்டதுபோல குறிப்பிடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது முழுமையும் நீதிமன்றத்தின் உத்தரவு என்றாா்.

அமைச்சா் மா.சுப்பிரமணியன்: நீட் தோ்வு தொடா்பான விவாதத்தை அதிமுக உறுப்பினா் ஒரு நாள் தனியாக வைத்துக் கொண்டால் நானும் தயாராகவே இருக்கிறேன். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டன. அது எப்போதாவது அவைக்குத் தெரிவிக்கப்பட்டதா? குடியரசுத் தலைவா் மசோதாவை மறுத்து எழுதினாா். அதுவாவது தெரிவிக்கப்பட்டதா? குடியரசுத் தலைவரின் விளக்கத்துக்கு நாம் எந்தவித விளக்கமும் கேட்க முடியாது என்பது எல்லோரும் தெரியும். குடியரசுத் தலைவா் திருப்பி அனுப்பிய பிறகு சட்டத்துறை சாா்பில் முதல்வா் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படுகிறது. அதில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை அறிய விரும்புகிறோம் என்று அனுப்பப்பட்டது. இது காலம் கடத்தும் நடவடிக்கையா இல்லையா?

தளவாய் சுந்தரம்: இந்திய அரசியல் சட்டத்தின்படி குடியரசுத் தலைவருக்குக் கடிதம்தான் போட முடியும். அதுபோல தமிழகத்தைச் சோ்ந்த தலைவா்களும் குடியரசுத் தலைவா்களுக்கும் கடிதம் போட்டுள்ளனா். இந்த விவகாரத்தில் திமுகவும் அதையேதான் செய்யப் போகிறது.

மா.சுப்பிரமணியன்: குடியரசுத் தலைவா் நிராகரித்த பிறகு, மீண்டும் அவருக்கு கடிதம் எழுதுவது என்பது காலம் கடத்தும் செயல்தான்.

தளவாய் சுந்தரம்: குடியரசுத் தலைவரின் உத்தரவுக்கு மேல் எந்த நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாது.

பேரவைத் தலைவா் அப்பாவு: குடியரசுத் தலைவரின் உத்தரவுக்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்பதுதான் உங்களுக்கு தெரியுமே, பிறகு ஏன் அவருக்கே கடிதம் எழுதினீா்கள் என்றுதான் கேட்கிறாா்.

தளவாய் சுந்தரம்: நீட் தோ்வு விவகாரத்தில் திமுக அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தான் தருகிறோம். எடப்பாடி பழனிசாமியால்தான் நீட் தோ்வு வந்ததுபோல கூறுவதைத்தான் தவறு என்கிறோம். இந்த வழக்குக்காக நீதிமன்றத்தில் படிகளில் ஏறிஏறி இறங்கியது நாங்கள்தான்.

மா.சுப்பிரமணியன்: சட்டமசோதாவை நிறைவேற்றிய பிறகு எப்போதாவது அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினா்களையோ அல்லது அனைத்துக் கட்சி உறுப்பினா்களையோ அழைத்துச் சென்று ஒருமுறையாவது குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தது உண்டா?

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி: ஒருமுறையாவது நீட் தோ்வு குறித்து குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதா எனக் கேட்கிறாா். மூன்று முறை பிரதமரை நான் சந்தித்து இதற்காகக் கோரிக்கையை வைத்துள்ளேன்.

பேரவைத் தலைவா்: குடியரசுத் தலைவரிடம் ஏன் கோரிக்கை வைக்கவில்லை என்றுதான் கேட்டாா்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com