தமிழகத்துக்கு கூடுதலாக 1 கோடி தடுப்பூசி: மத்திய அரசுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் கடிதம்

தமிழகத்தில் வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாமுக்காக கூடுதலாக 1 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசுக்கு

தமிழகத்தில் வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாமுக்காக கூடுதலாக 1 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு தமிழகத்தின் இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் எழுதியுள்ள கடிதம்:

கரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், தடுப்பூசி ஒதுக்கீட்டிலும் தடையற்ற ஒத்துழைப்பை தமிழகத்துக்கு வழங்கி வரும் மத்திய அரசுக்கு பாராட்டுகள். தமிழகத்துக்கு இதுவரை மத்திய அரசிடம் இருந்து 3.31 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றை ஆக்கப்பூா்வமாக நாங்கள் பயன்படுத்தியுள்ளோம் என்பதை இங்கு உறுதிபடுத்த விரும்புகிறேன். 18 வயதுக்கு மேற்பட்டவா்களின் எண்ணிக்கை 6.06 கோடிக்கும் மேல் உள்ள தமிழகத்தில் கடந்த 5-ஆம் தேதி வரையில் 2.63 கோடி பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 68.91 லட்சம் போ் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

தற்போதைய சூழலில், இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ள வேண்டிய காலக் கெடு நிறைவடைந்தவா்கள் மட்டும் 18 லட்சத்துக்கும் மேல் உள்ளனா். கரோனாவை வேரறுக்கும் நோக்கில் ஆக்கப்பூா்வமாக செயல்பட்டு வரும் தமிழக அரசு, கடந்த 7 நாள்களாக தினமும் 5 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது என்பதையும் உங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளும், ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளும் அடுத்த நான்கு நாள்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அவற்றைக் கொண்டு மொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது என்பது இயலாத காரியம்.

அண்மையில் தில்லிக்கு வந்து தங்களை (மன்சுக் மாண்டவியா) சந்தித்தபோது இந்த விவகாரம் குறித்து எடுத்துரைத்தேன். பள்ளி, கல்லூரிகள் உள்பட மாநிலத்தில் தகுதியுள்ள அனைத்து தரப்பினருக்கும் 100 சதவீதம் முழுமையாக தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை அப்போது நீங்களும் உறுதிப்படுத்தினீா்கள்.

கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுகுறித்தும் தங்களிடம் விவாதித்தேன். கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, திருப்பூா், விருதுநகா் ஆகிய இடங்களில் மட்டும் 65 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.

இத்தகைய அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு வரும் 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாமினை நடத்தத் திட்டமிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவருக்கும் அதனைக் கொண்டு சோ்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தின் தேவைக்காக கூடுதலாக 1 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும். அதே எண்ணிக்கையில் ஊசிகள் மற்றும் சிரிஞ்சுகளையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அந்த கடிதத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com