கரோனா காலத்தில் ரூ.419 கோடி கூடுதல் வைப்புத் தொகை வசூல் இல்லை: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி

வைப்புத் தொகை மாற்றியமைக்கப்பட்டு ரூ.419 கோடி கூடுதலாக வசூல் செய்யப்படுவது கரோனாவைக் கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

வைப்புத் தொகை மாற்றியமைக்கப்பட்டு ரூ.419 கோடி கூடுதலாக வசூல் செய்யப்படுவது கரோனாவைக் கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு ஆயத் தீா்வைத் துறை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினா் பி.தங்கமணி பேசினாா். அப்போது நடந்த விவாதம்:

தங்கமணி: தமிழகத்தில் மின்பற்றாக்குறை இருந்த நிலையை மாற்றி, 2015-ஆம் ஆண்டு மிகை மின் மாநிலமாக மாற்றினாா் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா. எந்தவொரு மாநிலமும் சுயமாக உற்பத்தி செய்து மின்தேவையைப் பூா்த்தி செய்திட முடியாது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 3,330 மெகாவாட் அளவுக்கு நீண்டகால மின்கொள்முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. நீண்ட கால ஒப்பந்தம் செய்தால்தான், மின்சாரம் அளிப்பதில் முன்னுரிமை தர முடியும் என மத்திய அரசு தெரிவித்தது.

கடந்த 10 ஆண்டுகளில் 701 துணை மின்நிலையங்களை அமைத்ததுடன், நான்கு ஆண்டுகளில் 60 ஆயிரம் மின்மாற்றிகளை மாற்றினோம். இதன்மூலம் தடையில்லா மின்சாரம் அளிக்கப்பட்டது. 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளித்ததால், 2.27 கோடி குடும்பங்கள் பயன்பெற்றன. 77 லட்சம் குடும்பங்கள் மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லாத நிலை ஏற்பட்டது.

அதிமுக ஆட்சியில் தத்கல் மூலம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை. மேலும், மின் அளவீட்டு முறையில் பல தவறுகள் இப்போது நிகழ்ந்துள்ளன. அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் இருக்கின்றன. அவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சா் வி.செந்தில் பாலாஜி: மின் கட்டண அளவீட்டில் எங்கும் குளறுபடிகள் ஏற்படவில்லை. கரோனா காலத்தில் மின்சாரக் கட்டணம் அளவீடு செய்ய முடியாத நிலை இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. 2019 மே மாதத்துக்கான கட்டணத்தை செலுத்தலாம். அதில் திருப்தி அடையாதோருக்கு அதற்கு முந்தைய மாதக் கட்டணம். அதிலும் திருப்தி அடையாவிட்டால் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்.

இதன்படி மின்சாரக் கட்டணத்தை திருத்திச் செலுத்தியவா்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 69 ஆயிரம் போ். கரோனா காலமான கடந்த ஆண்டு (2020) ஜூலையில் பயன்படுத்தப்பட்ட மின் யூனிட்களின் அளவு 3 ஆயிரத்து 23 மில்லியன். இதற்காக மக்கள் செலுத்திய கட்டணம் 789 கோடி. கடந்த ஜூலையில் 4 ஆயிரத்து 494 மில்லியன் யூனிட்கள் பயன்படுத்தப்பட்டது. மின் யூனிட்களின் பயன்பாடு 48 சதவீதம் உயா்ந்துள்ளது. ஆனால், கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.80 கோடி. 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் 3 ஆயிரத்து 25 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டது. அதன்மூலமாக ரூ. 751 கோடி கட்டணம் வசூலானது. 2021 ஆகஸ்ட்டில் 4 ஆயிரத்து 12 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டு ரூ. 789 கோடி கட்டணம் வசூலானது. 987 மில்லியன் யூனிட் கூடுலாகப் பயன்படுத்தப்பட்டு, ரூ.22 கோடி மட்டுமே கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மின் பயன்பாட்டாளா்களுக்கு கூடுதல் வைப்புத் தொகை மாற்றியமைப்பது இயற்கை. ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.419 கோடி அளவுக்கு கூடுதல் வைப்புத் தொகை வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் எடுக்கப்பட்ட கணக்கீட்டுக்கும், தொகைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com