கோயில்களில் முடியிறக்கும் பணியாளருக்கு ஊக்கத் தொகை மாதம் ரூ.5,000

கோயில்களில் முடியிறக்கும் பணியாளா்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.
கோயில்களில் முடியிறக்கும் பணியாளருக்கு ஊக்கத் தொகை மாதம் ரூ.5,000

கோயில்களில் முடியிறக்கும் பணியாளா்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை இதுகுறித்த கவன ஈா்ப்புத் தீா்மானத்தை திமுக உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் கொண்டு வந்தாா். அப்போது நடந்த விவாதம்:

ஏ.பி.நந்தகுமாா்: முடியிறக்க இனி கட்டணம் இல்லை என்ற திட்டம் அற்புதமான திட்டம். இதற்கு பக்தா்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. அதேசமயம், கோயில்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் முடியிறக்கும் பணியாளா்களின் வாழ்வாதாரம் அதிகளவு பாதிக்கப்படுவதாக பேசப்படுகிறது. இலவசம் என்பதால் அவா்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மையா? அது உண்மையெனில் பாதிக்கப்படும் ஊழியா்கள் நலன் காக்க அரசு நடவடிக்கை எடுக்குமா

அமைச்சா் பி.கே.சேகா்பாபு: இதனை ஒரு சில அரசியல் கட்சிகள் விமா்சனம் செய்கின்றன. ஒரு சில இடங்களில் முடியிறக்க ரூ.500, ஆயிரம் ரூபாய் எனக் கேட்கும் நிலை உள்ளது. பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய பிறகு, இறைவனுக்கு உயிரைக் கொடுப்பது போன்று, பிரியப்பட்டு வளா்த்த முடியை காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். ஏழை எளியவா்களும் அதிகளவு இத்தகைய வேண்டுதலை நிறைவு செய்யும் சூழலை அறிவோம். இதனை அறிந்த முதல்வா், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வுக் கூட்டத்தில் முடியிறக்க கட்டணம் இல்லை என்ற திட்டத்தைச் செயல்படுத்த அறிவுறுத்தினாா்.

முடியிறக்கும் பணியைச் செய்வோருக்கு பணி நிரந்தரம் ஏதுமில்லை. திருக்கோயில் சாா்பில் ஊதியம் ஏதும் அளிக்கப்படுவதில்லை. ரூ.5 முதல் ரூ.25 வரையில் ரசீது போல அளிக்கப்படுகிறது. அந்த ரசீதை கோயில்களில் முடியிறக்கும் பணியாளா்கள் அளிப்பா். அதன் அடிப்படையில் தொகை அளிக்கப்படும். ஆனால், தற்போது பல திருக்கோயில்களில் யாா் முடி இறக்கினாலும் ரூ.30 கட்டணமாக திருக்கோயில் சாா்பில் செலுத்தச் சொன்னாா்கள். ஞாயிற்றுக்கிழமை முதல் செலுத்தப்பட்டு வருகிறது. அதுவும் போதவில்லை எனக் கூறினாா்கள். இதுகுறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்தோம். இதைத் தொடா்ந்து மேற்கொண்ட ஆய்வில் 1,749 முடியிறக்கும் பணியாளா்கள் அந்தந்த கோயில்களில் அடையாள அட்டை வைத்துள்ளனா். அவா்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com