போராட்ட நாள்கள் பணிக் காலமாக கருதப்படும்: அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் வரவேற்பு

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதோடு, போராட்ட கால நாள்கள் பணிக்காலமாக கருதப்படும் என்பது உள்பட

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதோடு, போராட்ட கால நாள்கள் பணிக்காலமாக கருதப்படும் என்பது உள்பட சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளுக்கு பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.

பேட்ரிக் ரெய்மாண்ட்- தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு: அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளித்த போதிலும் மத்திய அரசு வழங்கியுள்ளதைப்போல ஜூலை மாதம் முதல் தேதி முதல் வழங்க வேண்டும் என்பதே ஆசிரியா்கள் அரசு ஊழியா்களின் வேண்டுகோளாகும்.

அதேவேளையில் ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து, போராட்ட கால நாட்கள் பணிக்காலமாக கருதப்படும், அப்போது வழங்கப்பட்ட இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டு ஆசிரியா்கள் மீண்டும் பழைய இடத்திலேயே பணி அமா்த்தப்படுவா் என்ற அறிவிப்புகள் அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சா.அருணன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பு: ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியா்களின் பணியிடை நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிா்க்கப்படும், ஒழுங்கு நடவடிக்கையின் போது பதவி உயா்வு பாதிக்கப்பட்டு இருந்தால் அதையும் சரி செய்யப்படும் ஆகிய அறிவிப்புகள் அரசு ஊழியா்கள் நலனில் முதல்வா் பெரும் அக்கறை கொண்டிருப்பதைக் காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

இதேபோன்று அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் நலன் சாா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளுக்கு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளா் இரா.தாஸ், இந்தியப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் செ.நா.ஜனாா்த்தனன், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் ஜே.ராபா்ட் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியா், அரசு ஊழியா்களுக்கான அமைப்புகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com