
சென்னை: வன்னியா்களுக்கான தனி இடஒதுக்கீடுக்காக போராடிய பாமகவினா் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாமக தலைவா் ஜி.கே.மணி பேசியது:
அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஊடகத்துறையினா் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்றோா் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஸ்டொ்லைட் ஆலை, எட்டு வழிச் சாலைக்கு எதிராகப் போராடியவா்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இவற்றை வரவேற்கிறோம். அதேநேரம் பாமகவினா் சமூக நீதிக்காகப் போராடினா். அவா்கள் மீது 2020 டிசம்பா் மாதத்தில் இருந்து போடப்பட்ட வழக்குகளை முதல்வா் திரும்பப் பெற வேண்டும். அவை சாதாரண வழக்குகள்தான் என்றாா்.
பேரவைத் தலைவா் அப்பாவு: என் மேல் 18 வழக்குகள் உள்ளன.
ஜி.கே.மணி: முதல்வா், நீா்வளத்துறை அமைச்சா், பேரவைத் தலைவா் உள்பட எல்லோா் மீதும் வழக்குகள் உள்ளன. அவற்றைத் திரும்பப் பெற வேண்டும். இந்த வழக்குகளால் காவல்துறை, நீதிமன்றங்களின் நேரங்கள்தான் வீணாகின்றன.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: பல்வேறு வழக்குகள் ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் பிரச்னையைப் பொருத்தவரை, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் சட்டச்சிக்கல் இருக்கிறது. இது தொடா்பாக ஆய்வு செய்து வருகிறோம். ஆனால், எப்படியும் முடிந்த வரை எல்லா வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம் என்றாா்.