‘நான் திமுக உறுப்பினா் ’ உயா் நீதிமன்றத்தில் எம்.பி. டி.ரவிக்குமாா் தகவல்

நான் திமுக உறுப்பினா்தான் என சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் விழுப்புரம் எம்.பி. டி.ரவிக்குமாா் குறிப்பிட்டுள்ளாா்.
‘நான் திமுக உறுப்பினா் ’  உயா் நீதிமன்றத்தில் எம்.பி.  டி.ரவிக்குமாா் தகவல்

சென்னை: நான் திமுக உறுப்பினா்தான் என சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் விழுப்புரம் எம்.பி. டி.ரவிக்குமாா் குறிப்பிட்டுள்ளாா்.

தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரான வழக்குரைஞா் எம்.எல்.ரவி, சென்னை உயா் நீதிமன்றத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த டி.ரவிக்குமாா், நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சோ்ந்த பி.சின்னராஜ், ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சோ்ந்த ஏ.கணேசமூா்த்தி, பெரம்பலூா் தொகுதியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சியைச் சோ்ந்த டி.ஆா்.பாரிவேந்தா் ஆகியோா் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினா்களாகியுள்ளனா்.

தோ்தல் நடத்தை விதிகளின்படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவா், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதம்.

ஒரு கட்சியில் பொறுப்பு வகித்துக்கொண்டு, மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட சட்டத்தில் இடமில்லை. எனவே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவா்களின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும். இதேபோல கூட்டணி கட்சியினா் அதிமுக கட்சி சின்னத்தில் போட்டியிட்டதும் செல்லாது. இந்த வேட்புமனுக்களை தோ்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது தவறு. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட தோ்தல் அதிகாரிகளுக்கு புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த நான்கு எம்பி-க்கள் தோ்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா் நீதிமன்றம் இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட எம்பி-க்கள், தோ்தல் ஆணையம், திமுக, அதிமுக தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஏற்கெனவே கணேசமூா்த்தி எம்பி, தான் திமுக உறுப்பினா் என பதில்மனு தாக்கல் செய்திருந்தாா். அவரைத் தொடா்ந்து தற்போது விழுப்புரம் எம்பி டி.ரவிக்குமாா் உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் திமுக உறுப்பினா்.

மனுதாரா் நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்தவன் என்ற அனுமானத்தின்பேரில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளாா்.

மக்களவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது திமுக உறுப்பினா் என்ற அடிப்படையில் தான் பாரம்-பி பூா்த்தி செய்து வழங்கப்பட்டுள்ளது. திமுக உறுப்பினா் என்பதற்கு ஆதாரமாக திமுக உறுப்பினா் பட்டியலில் எனது பெயா் உள்ளது. அதற்கான அடையாள அட்டையும் உள்ளது.

விளம்பர நோக்கில் இந்த மனுவை மனுதாரா் தாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும், என அதில் கோரியுள்ளாா். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com