ஆட்சி மாற்றம் நடந்தால் மட்டுமே சமையல் எரிவாயு விலை குறையும்: ப.சிதம்பரம்

நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தால் மட்டுமே சமையல் எரிவாயு விலை குறையும் என்று  மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் தனியார் பல் மருத்துவமனையை திறந்துவைத்த மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்
காரைக்குடியில் தனியார் பல் மருத்துவமனையை திறந்துவைத்த மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்

நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தால் மட்டுமே சமையல் எரிவாயு விலை குறையும் என்று  மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரபு டென்டல் என்ற மருத்துவமனையை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த அவர் தனது எம்.பி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சிவகங்கை மக்களவை தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் சட்டபேரவை தொகுதி செட்டிநாட்டில் அரசு வேளாண் கல்லூரியும், காரைக்குடி தொகுதியில்  கல்வி நகரமாம் காரைக்குடியில் அரசு சட்டக் கல்லுரியும் தொடங்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ரகுபதி, கேஆர். பெரியகருப்பன் ஆகியோருக்கும் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல் காரைக்குடி அருகே கண்டனூரில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த கதர் கிராமத் தொழில்கள் மையத்தை ரூ. 47 லட்சம் செலவில் புதுப்பித்து மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த அத்துறை அமைச்சருக்கும் நன்றி.

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. எல்லா வகையிலும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதேபோன்று கடமை கட்டுப்பாடு உணர்வோடு அரசு செயல்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தர் நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது. புதிய ஆளுநர், புதிய அரசு இதற்கு தீர்வு காண உடனடியாக இப்பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்க வேண்டும்.

கொடநாடு சம்பவம் குறித்து வழக்கு உள்ளது. அதைப்பற்றி நான் என்ன சொல்லமுடியும்?. அங்கு குற்றம் நடந்திருக்கிறது. குற்றவாளி யார்?. வழக்கை விசாரித்து யார் குற்றவாளி என்று கண்டுபிடித்து சட்டப்படி உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றுதான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்துவது இந்திய பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தல் என்று நான் நினைக்கவில்லை. சீனாவும் அங்கு ராணுவம் மற்றும் தளவாடங்களை குவிக்கவில்லை. ஆனால் இந்து மகா சமுத்திரத்தை இந்தியாவின் செல்வாக்குப் பகுதி என்று நினைக்கிறதை கொஞ்சம் கொஞ்சமாக கடந்த 7 ஆண்டுகளில் சிதைந்து வருகிறது என்பதை மட்டும் மக்கள் உணர்ந்தால் போதும். 

மத்திய அரசின் தான்தோன்றித்தனமான பழைய வரலாறு தெரியாமல் வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்துக்கொண்டு செயல்படுவதால்தான் இந்த செல்வாக்கு குறைந்து வருகிறது. பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு குறைந்து வருவதற்கு காரணம் சரியான வெளிநாட்டுக் கொள்கை இல்லை. வெளிநாட்டுக் கொள்கைகளை சரியாக வகுத்து நடத்துவதற்கான சரியான நபர் தில்லியில் கிடையாது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக விற்றால் பரவாயில்லை. மொத்த வியாபாரம் போல ஒட்டுமொத்தமாக விற்கிறார்கள். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்பதை பிரதமர் பட்டியலிட்டுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். 70 ஆண்டுகளில் காங்கிரஸ் மட்டுமல்ல மொரார்ஜி தேசாய், சரண்சிங், வி.பி. சிங், சந்திரசேகர், தேவ கெளடா, குஜ்ரால் என மற்ற பிரதமர்களும் இருந்துள்ளனர். அவர் களும் குறுகிய காலத்தில் பணிகளை செய்துள்ளார்கள் வாஜ்பாய் 6 ஆண்டுகாலம் பிரதமராக இருந்துள்ளார்.

70 ஆண்டுகளில நிர்மானித்த பொதுத்துறை நிறுவனங்களை, சொத்துக்களை மொத்த விலைக்கு விற்கப்போகிறார்கள். பொதுத்துறைக்கு மூடு விழா திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இது வேடிக்கையான விசயமல்ல. மிகுந்த வேதனை தரக்கூடிய விசயம். ரயில்வே, மும்பை, தில்லி சரக்கு ரயில், விமான நிலையம், துறை முகங்கள் போன்றவை தனியார் மயமாக்கப் போகிறார்கள். இது யாருக்கு போகிறது என சிறு குழந்தைக்குக்கூட தெரியும்.

யாருடனும் கலந்து ஆலோசிப்பதில்லை. இதனை நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கவில்லை. நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பின் அறிவிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தால் பெரிய அமளியாகியிருக்கும். ஆர்எஸ்எஸ் கூட எதிர்த்துள்ளது. இதனை எந்த துணிச்சலில் செய்கிறார்கள். 

நாட்டில் தற்போது சமையல் எரிவாயு விலை குறைய வாய்ப்பில்லை. இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடந்தால் மட்டுமே சமையல் எரிவாயு விலை குறையும். 

ஆப்கானிஸ்தானில் செல்வாக்கு உள்ள நாடாக இந்தியா ஒரு காலத்தில் இருந்தது. ஏராளமான உதவிகள், கடனுதவிகள் செய்தோம். அந்த இடத்தில் இந்தியா இப்போது இல்லை. பாகிஸ்தான் அந்த இடத்தில் அமர்ந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. ஆட்சியில் உள்ள பிரதமர் மோடி தான் இதனை விளக்க வேண்டும். 

தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெறும். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கும் பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருப்பதற்கும் தமிழக அரசுக்குப் பாராட்டுக்கள் என்றார்.

இப்பேட்டியின் போது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ கேஆர். ராமசாமி, காரைக்குடி சட்டபேரவை உறுப்பினர் எஸ். மாங்குடி, முன்னாள் எம்.எல்.ஏ (திருமயம்) ராமசுப்புராம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப. சத்தியமூர்த்தி, காரைக்குடி நகரத் தலைவர் பாண்டி மெய்யப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com