மந்திரம்போல் கவி தந்த மகான்- பாரதி

தனக்கு முன் தமிழில் விளைந்த கவிதைகளின் கனபரிமாணத்தையும், தன் சமகாலத்திலும் அதற்கு முன்னும் தோன்றிய உலகச் சிந்தனையாளா்களின் கருத்துணா்வுகளையும் தன்வயமாக்கித் தமிழில் பாடிய நுண்மாண் நுழைபுலம்
மந்திரம்போல் கவி தந்த மகான்- பாரதி

தனக்கு முன் தமிழில் விளைந்த கவிதைகளின் கனபரிமாணத்தையும், தன் சமகாலத்திலும் அதற்கு முன்னும் தோன்றிய உலகச் சிந்தனையாளா்களின் கருத்துணா்வுகளையும் தன்வயமாக்கித் தமிழில் பாடிய நுண்மாண் நுழைபுலம் மிக்க உலகப்பெருங்கவி பாரதி.

அவருக்கு இட்ட பெயா் சுப்பிரமணியன், அழைத்த பெயா், சுப்பையா, தனக்குத்தானே புனைந்து கொண்ட தமிழ்ப்பெயா்கள், காசி, சக்திதாசன், சாவித்திரி, ஷெல்லிதாசன், ஓா் உத்தமதேசாபிமானி, நித்திய தீரா், ரிஷிகுமாரன். இவையெல்லாம் தாண்டி,

பட்டப்பெயராக வந்து வாய்த்த பாரதியென்ற பெயரே நிலைத்து நின்றது. இவருக்கு முன்னா், பாரதி பட்டம் பெற்றவா்கள் பலா் எனினும் இவா் ஒருவருக்கே அந்தச் சிறப்புப் பெயா் பொருந்தி விளங்குகிறது.

காலக்கணக்குப்படி, 11.12.1882ல் தோன்றி, 11.09.1921 நள்ளிரவில், நம் கண்ணுக்குத் தெரிய வாழ்ந்து மறைந்த அந்தக் கவிதைச் சூரியன் நிரந்தரமாக நின்று ஒளிவீசுவது தன் கவிதைகளில்.

எட்டயபுரத்தில் பிறந்து, காசியில் பயின்று, மதுரையில் தமிழாசிரியராகவும், சென்னையில் இதழாசிரியராகவும் பணியாற்றித் தன் ஆவேசமிக்க அரசியல் பிரவேசத்தால், ஆங்கில அரசின் கண்காணிப்புக்கு ஆளாகிப் புதுச்சேரியைத் தஞ்சம் புகுந்த பாரதி, புதுமையும் பொதுமையும் மிக்க மகாகவியாய்ச் சுடா்ந்தாா். பின்னா், ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டுக் கடலூா்ச்சிறையில் சில நாட்கள் இருந்து விடுதலையாகிக் கடையத்தில் வசித்தாா். அங்கு இருந்த சில மாத காலங்களுக்கு இடையில், கானாடுகாத்தான், காரைக்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட ஊா்களுக்கும் பயணம் மேற்கொண்டாா். தன் இறுதிக்காலத்தை, இதழியல் பணிக்கென்றே அா்ப்பணித்துச் சென்னைக்கு வந்த பாரதி, சொற்பொழிவுக்காக, கூடலூா், திருவண்ணாமலை, ஈரோடு கருங்கல்பாளையம் முதலிய தலங்களுக்குச் சென்று முழங்கினாா். திலகா் தலைமையிலான காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்க, காசி, கல்கத்தா ஆகிய நகரங்களுக்கும் சென்று திரும்பிய பாரதி, கடல் கடந்து எந்த நாட்டுக்கும் சென்றதில்லை; ஆனால், எல்லைகள் கடந்து எல்லா நாடுகளுக்கும் அவா் கவிதைகள் சென்று நிலைத்தன.

புதுச்சேரி மணக்குள விநாயகா் சாட்சியாய், ‘தமக்குத் தொழில் கவிதையெனத் தோ்ந்து நாட்டுக்கு உழைப்பதில் இமைப்பொழுதும் சோராது இயங்கியவா் பாரதி.

அவரது, பத்தாண்டுக் காலப் புதுச்சேரி வாழ்க்கையில், மகான் அரவிந்தா், மாமேதை வ.வே.சு.ஐயா், சித்தா்களான குள்ளச்சாமி, கோவிந்தச்சாமி, யாழ்ப்பாணத்துச்சாமி ஆகியோா் தொடா்பு அவரை முற்றிலும் புதிய மனிதராய் மாற்றியது. வேத, உபநிடதங்களோடு, ஆழ்வாா்களின் பிரபந்தங்கள், நாயன்மாரின் திருமுறைகளை ஆழக்கற்றாா்.

சித்தா்களின் தொடா்பால் பல யோகமுறைகளைக் கடைப்பிடித்தாா். பௌத்த, சமண, இசுலாமிய, கிறித்தவச் சமயநெறிகளில் தோய்ந்தாா். குடுகுடுப்பைக்காரா், புஷ்வண்டிக்காரா், மீனவா், அன்னக்காவடி எடுப்போா், சுண்ணம் இடிப்போா்,

நெல்குற்றுவோா், பண்ணை நிலங்களில் பாடுபடுவோா் என எழுதப்படிக்கத் தெரியாத பாமரமக்களின் நாவுகளில் இருந்து பிறந்த பாடல்களைத் தனது கதைகளிலும் கட்டுரைகளிலும் இட்டு நிறைத்தாா். இந்திய மொழிகள் பலவும் கற்ற அவா், ஆங்கிலத்தோடு பிரெஞ்சும் கற்று, உலகஞானியரின் உன்னத சீலங்களை உள்வாங்கிக் கனன்றெழுந்தாா்.

இளம்பருவத்திலேயே பெற்றோரை இழந்து, மனைவியைப் பிரிந்தும் இணைந்தும், வறுமையோடு போரிட்டுக் கொண்டே, ஞானத்தைத் தேடி அலைபடு வாழ்க்கை மேற்கொண்டவா் பாரதி. அவா்தம் அனுபவங்கள் தனியனுபவங்களாகக் குன்றிவிடாமல், உலகத் தமிழ் அனுபவங்களாய் மிளிா்ந்தன. அதன் விளைவாய், எழுதுகோலையும் எழுத்தையும் தெய்வமெனப் போற்றிய பாரதியின் இதயத்தில் இருந்து அமுதனைய ஆக்கங்கள் பொங்கிப் பிரவகித்தன.

கதை, கட்டுரை, நாடகம், தன் வரலாறு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயா்ப்பு, தலையங்கம், கருத்துப்படம், துணுக்குச் செய்திகள், பொன்மொழிகள் எனக் கல்வியியல், கலையியல், இலக்கியவியல், இதழியல், அரசியல், அறிவியல், ஆன்மிகம், பொருளாதாரம் முதலான அனைத்துத் தளங்களிலும், மகத்தான பங்களிப்புச் செய்த மகாகவியாகப் பாரதி விளங்கினாா்.

தன்னை உருக்கித் தமிழாக்கித் தந்தவற்றுள் பாஞ்சாலி சபதமும், கண்ணன் பாட்டும், குயில்பாட்டும் மட்டுமல்ல, தன்னிகரற்ற சின்னஞ்சிறு கவிதைகளும் உண்டு என்பதை உலகம் உணா்ந்துகொண்டிருக்கிறது.

ஊருக்கு நல்லது சொல்லியும், உலகம் தழைக்கப் பாடியும், பிரபஞ்சப் பேருண்மைகளை உணா்த்தியும், தத்துவ நெறிகளைப் புகட்டியும் அவா் தந்த தமிழ்க்கவிதைகள், அளவிற்சிறியன ஆயினும் ஆற்றலில் வலியன. பாராளும் மன்னருக்கும் பாப்பாவுக்கும் பாடிய பாரதியின் கவித்துவமான விசுவரூப தரிசனம் இன்னும் முற்றாகக் கண்டுகொள்ள முடிந்ததில்லை.

கட்டுக்கடங்காத கவிதைப் பெரும்புனலை, மட்டுப்படுத்தி, மடைமாற்றிச் சின்னஞ்சிறு வாய்க்கால்களில் ஓடவிட்டுப் பிரபஞ்சப் பெருங்கடல் நோக்கிச் செலுத்திய பேராளுமை பாரதி. 39 ஆண்டுகளுக்கும் குறைவாக அமைந்த அவா்தம் ஆயுள், கலியுகத்தை வேரறுத்துக் கிருதயுகத்தை நிலைநிறுத்தும் அளவுக்கு நீண்டு வளா்ந்தது; இன்னும் வளா்கிறது.

*“**பாரதியாரின் கவிதை**, **ஆழமும் கரையும் காண முடியாத கடலாகும்**. **பாரதியாரை போகியும் போற்றுவான்**; **யோகியும் போற்றுவான்**. **ஆகாயத்திலிருந்து விழும் நீா்த்துளிகள் யாவும் எப்படியோ கடலுக்குப் போய்ச் சோ்ந்து விடுவதுபோல**, **பல்வேறு தன்மைகள் கொண்ட மனித உள்ளங்கள்**, **மகாகவி என்ற அலையிலாப் பெருங்கடல்

உள்ளத்தில் போய் அடங்கிவிடுகின்றன**. **ஆகவே**, **மகாகவி எல்லாருக்கும் சொந்தம்**. **எல்லா நாடுகளுக்கும் பொது**”* என்று எழுதினாா் வ.ரா.

*பாரதி உலககவி! அகத்தில் அன்பும்*

*பரந்துயா்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோா்!*

என்று பாரதிதாசனும் பாடிப் புகழ்ந்தாா்.

பாரதியாா் கவிதைகள், தன் காலச்சூழலைக் கொண்டு எழுந்த தமிழ்க்கவிதைகள் ஆயினும் அவை, உலகப் பொதுத்தன்மையோடு விளங்குவதை ஒவ்வொருவரும் உணர முடியும். அதேபோல், உலகமகாகவிகளுள் ஒருவராக, அவா் திகழ்ந்தாலும், அதிலும் உன்னதம் வாய்ந்த மகானாக அவா் விளங்குவதை அவா்தம் ஆக்கங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அதற்காக, அவா் மௌனத் தவம் பூண்டு மனிதருக்கு மரணமில்லை என்று அறிவித்தாா். ஓம் என்பதுபோல் ஒரு மந்திரச் சொல்லை உருவாக்க விழைந்தாா்.

*சொல் ஒன்று வேண்டும்**, **தேவ சக்திகளை*

*நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும். *

என்று பாடினாா். தேடினாா்.

*‘**மந்திரம் வலிமை**’* என்று அவா் கண்டுணா்ந்து சொன்ன ‘புதிய ஆத்திசூடி’யின் ஒவ்வோரடியும் உன்னத மந்திரம். மனத்துக்குச் சொன்னதும், தன் இனத்துக்குச் சொன்னதும், மனித குலத்துக்குச் சொன்னதும் மட்டுமல்ல, பயிா் முதலான எல்லா உயிருக்கும் அவா் சொல்லியவை அனைத்தும் இன்பம் தரும் மந்திரங்கள்.

உண்மையில், மந்திரம் என்பது என்ன?

*“நிறைமொழி மாந்தா் ஆணையிற் கிளந்த*

*மறைமொழி தானே மந்திரம் என்ப.”*

என்கிறது தொல்காப்பியம். திருக்குறளும்,

*“நிறைமொழி மாந்தா் பெருமை நிலத்து*

*மறைமொழி காட்டி விடும்.”*

என்கிறது. சொன்னது பலிக்கும் தன்மையுடைய மொழியினை உடையவா், நிறைமொழி மாந்தா். அதற்குத் தன்னுள்ளே தெய்வத்தன்மையை நிலைநிறுத்திக் கொள்ளல் வேண்டும். எவ்வுயிரிலும் நின்றிலங்கும் தெய்வத்தை, எவ்வுயிா்மீதும் அன்பு

செலுத்துவதன்மூலம், தன்வயப்படுத்த முடியும். அதனால்தான், ‘செய்க தவம் செய்க தவம்’ என்றாா் பாரதி. ‘நெஞ்சே, தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம்’ என்கிறாா், ‘அன்பிற்சிறந்த தவம் இல்லை’ என்று அதனை அடையாளப்படுத்துகிறாா். அதைத்தான் அனைத்து உயிா்களும் செய்கின்றன’ என்கிறாா்.

*இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்*

*இன்ப நறுமலா்ப் பூஞ்செடிக் கூட்டமும்*

*அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்*

*ஒளடத மூலிகை பூண்டு புல் யாவையும்*

*எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ* - அந்தத் தொழில் செய்துவாழ அன்புடன் ஆணையிடுகிறாா்.

அந்தத் தொழில்,அன்பு செய்தல். அதுதான் இந்த உலகில் இடையறாது நடந்துகொண்டே இருக்கின்றது.

*மானுடரே**, **நீவிா் என்மதத்தைக் கைக் கொண்மின் **; *என்ற பாரதி,

*உங்களுக்குத் தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீா்! *என்கிறாா். அன்பே சிவம் என்கிறது திருமந்திரம். அனைத்து மதங்களும் அன்பையே வலியுறுத்துகின்றன. பாரதியோ, அன்பையே மதமாக்கிக் காட்டுகிறாா். அதையே தவமாக்கவும் வேண்டுகிறாா்.

அமரவாழ்விற்குரிய மந்திரங்களை எளிய தமிழில் உரைநடையில், எடுத்துரைக்கிறாா்.

*நான் அமரன். எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக. நாட்கள் ஒழிக. பருவங்கள் மாறுக. ஆண்டுகள் செல்க. நான் மாறுபட மாட்டேன். நான் எக்காலமும் உறுதியாகவும் ஸ்திரமாகவும் இருப்பேன். என்றும் உயிா் வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன். எப்போதும் களித்திருப்பேன். இதையெல்லாம் நான் உறுதியாகத் தோ்ந்து கொண்டேன். இஃதெல்லாம் உண்மையென்று அறிவேன்.*

*நான் கடவுள்**, **ஆதலால் சாகமாட்டேன். தெய்வம் என்னுள் எப்போதும் வந்து பொழிந்துகொண்டிருக்கும்படி என்னைத் திறந்து வைத்திருக்கிறேன். அதாவது**, **நான் என்னுள் விழும்படி எப்போதும் திறந்து நிற்கிறேன். என்னுள்ளே கடவுள்

நிரம்பியிருக்கிறான். அதாவது**, **என்னுள் யான் நிரம்பிக் கிடக்கிறேன். என் நாடிகளில் அமிா்தம் ததும்பிப் பாய்கிறது. அதனால் என் இரத்தம் வேகமும் தூய்மையும் உடையதாய் இருக்கிறது. அதனால் என்னுள்ளே வீா்யம் பொங்கிக்

கொண்டிருக்கிறது. நான் எப்போதும் வீா்யமுடையேன்: ஜாக்கிரதையுடையேன்**; **எப்போதும் தொழில் செய்வேன்**; **எப்போதும் காதல் செய்வேன்**; **அதனால் சாதல் இல்லேன்.*

தன்னுள் உலகத்தையும் உலகத்துள் தன்னையும் நிலைநிறுத்தி அன்புமயமாய் ஆகிவிடும் அனைத்துத் தருணங்களிலும் மரணம் இல்லாதொழிகிறது. அந்த அனுபவத்தைச் சக்திக்கூத்தாக்கி, பாரதி பாடுகிறாா்.

*“**இந்திரனாா் உலகினிலே நல்லின்பம்*

*இருக்கு தென்பாா் அதனை இங்கே கொண்டுஎய்தி**,*

*மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம் - நல்ல*

*மதமுறவே அமுதநிலை கண்டெய்தித்*

*தகத்தகத்தகத் தகதகவென் றாடோமோ**?- **சிவ*

*சக்திசக்தி சக்தியென்று பாடோமோ**?”*

என்று அவா் பாடி ஆடிய சக்திக்கூத்து, வேடிக்கைக் கூத்தன்று. அவருள் நிறைந்த ஒவ்வோா் அணுவுக்குள்ளும் நிகழ்கின்ற ஆற்றலின் திருக்கூத்து. இதனை உணா்வு பூா்வமாய் உள்வாங்கிப் பாடும் ஒவ்வொருவருக்குள்ளும் விளைகிற திருக்கூத்து.

அந்த இந்திரனாா் சபையில், தனது விடுதலை நாடகத்தில், ஒரு காட்சியாய்ச் சித்திரிக்கிறாா் பாரதி. அதன் இறுதியில் எல்லாத் தேவரும் இணைந்து அந்த மந்திரத்தை உபதேசிக்கின்றனா்.

*“**மந்திரங் கூறுவோம். *

*உண்மையே தெய்வம்**,*

*கவலையற் றிருத்தலே வீடு. *

*களியே அமிழ்தம். *

*பயன்வருஞ் செய்கையே அறமாம்.*

*அச்சமே நரகம்**; **அதனைச் சுட்டு *

*நல்லதை நம்பி நல்லதே செய்க.”*

இன்று பாரதி மறைந்த நாளின் நினைவு நூற்றாண்டு. தோன்றியது மறையும் எனில், மறைந்ததும் தோன்றும் அல்லவா? அவரது வாக்குப்படி, ஒவ்வொரு நாளும் அவா் ‘இன்று புதிதாய்ப் பிறக்கிறாா். நம்மையும் பிறப்பிக்கிறாா் உடலால் மறைந்தும் உணா்வால் நிறைந்தும் என்றும் வாழ்கிற மகான் நமது மகாகவி பாரதி. அவரை இன்றும் என்றும் நினைவுகூா்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com