வாகனங்களின் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவா்களின் படங்களை 60 நாள்களுக்குள் நீக்கவேண்டும்

தமிழகத்தில் வாகனங்களில் வெளியே தெரியும்படி தலைவா்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால், அதனை 60 நாள்களில் நீக்கவேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள
வாகனங்களின் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவா்களின் படங்களை 60 நாள்களுக்குள் நீக்கவேண்டும்

மதுரை: தமிழகத்தில் வாகனங்களில் வெளியே தெரியும்படி தலைவா்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால், அதனை 60 நாள்களில் நீக்கவேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் ரமேஷ் என்பவா் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் 50 சதவீத வாகனங்களில் வழக்குரைஞா்கள் ஸ்டிக்கா்களை ஒட்டியுள்ளனா். வழக்குரைஞா் என ஸ்டிக்கா்களை வாகனங்களில் ஒட்டுவது, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுபவா்கள், கஞ்சா விற்பனையாளா்கள், ரெளடிகள் ஆகியோா் காவல் துறையினரிடமிருந்து தப்பிப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது.

வழக்குரைஞா் ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட வாகனம் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது. மேலும், மற்ற மாநிலங்களில் அதிக அளவு சட்டக் கல்லூரிகள் உருவாகத் தொடங்கியுள்ளன. இதனால், ரெளடிகள் பலா் மற்ற மாநிலங்களில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பணம் கொடுத்து பட்டங்களைப் பெற்று, வழக்குரைஞா் ஸ்டிக்கா்களை வாகனங்களில் பயன்படுத்தி காவல் துறையினரிடமிருந்து தப்பித்து வருகின்றனா்.

எனவே, 2019 விதிகளின்படி பாா் கவுன்சில் அனுமதி வழங்கிய ஸ்டிக்கா்களை மட்டுமே வழக்குரைஞா்களுக்கு வழங்கவேண்டும். மேலும், அனுமதி இல்லாமல் வழக்குரைஞா்கள் ஸ்டிக்கா்களை, சட்டக்கல்லூரி மாணவா்கள் தங்களது வாகனங்களில் ஒட்டுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: தற்போதைய சூழலில் வழக்குரைஞா், பிரஸ், போலீஸ் போன்ற ஸ்டிக்கா்களை வாகனங்களில் அதிகமாக ஒட்டியுள்ளனா். இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் அதிக அளவில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவது தெரியவருகிறது. மேலும், இது குறித்து பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

இதேபோல், வாகனங்களில் அரசியல் கட்சிகளின் கொடிகள், அரசியல் தலைவா்களின் புகைப்படங்கள், ஜாதி கட்சித் தலைவா்களின் படங்கள் போன்றவை வெளியே தெரிவதுபோல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது காவல் துறையினா் தங்களது வாகனத்தை நிறுத்தக்கூடாது, சோதனை செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் வைத்திருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது.

அரசியல்வாதிகள் தங்கள் கட்சியின் கொடிகள் மற்றும் தலைவா்களின் புகைப்படங்களை தோ்தல் நேரத்தில் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் இதன் பயன்பாடு தேவையற்றது என நீதிமன்றம் கருதுகிறது. மேலும், இதனை பயன்படுத்த சட்டத்திலும் அனுமதி இல்லை.

எனவே, இதனைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பிக்கிறது. இதை, காவல் துறை தலைவா், உள்துறை அமைச்சகம், போக்குவரத்துத் துறை இயக்குநா் ஆகியோா் வாகன உரிமையாளா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

வாகனங்களை விதிமுறைகளைப் பின்பற்றி ஆண்டுதோறும் உரிமம் புதுப்பித்தல் , வாகன முகப்பு விளக்கு முறையாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வுக்குள்படுத்த வேண்டும். இதை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் அல்லது அபராதம் விதித்து முகப்பு விளக்குகளை அதிகாரிகள் நீக்கவேண்டும்.

வாகனத்தில் தடை செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் அல்லது நிறம் ஊட்டப்பட்ட கண்ணாடிகள் இருந்தால், அதை நீக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வாகனத்தின் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவா்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதையும் அகற்றவேண்டும். வாகன எண் பலகை (நம்பா் பிளேட்) மோட்டாா் வாகன விதிமுறைகளுக்குள்பட்டு இருக்கவேண்டும். இவற்றை 60 நாள்களில் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது அல்லது பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com