யுகப் புரட்சியை இனங்கண்ட பெருங்கவிஞன்

1917-ஆம் ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவில் மூண்டெழுந்த புரட்சி உலக வரலாற்றின் போக்கையே மாற்றிவிட்டது. ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் மக்களுக்கு
யுகப் புரட்சியை இனங்கண்ட பெருங்கவிஞன்

1917-ஆம் ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவில் மூண்டெழுந்த புரட்சி உலக வரலாற்றின் போக்கையே மாற்றிவிட்டது. ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் மக்களுக்கு நம்பிக்கையையும், துணிவையும் ஊட்டி அவர்களைக் கிளர்ந்தெழ வைத்தது.

இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் அரசு இந்திய மக்களிடம் அக்டோபர்ப் புரட்சியைப் பற்றிய உண்மையான செய்திகள் பரவிவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டியது. செய்திகள் திரித்துக் கூறப்பட்டன. வெளியிலிருந்து உண்மையான செய்திகள் வரவிடாமல் தடுக்கப்பட்டன. அந்த நாளில் இந்தியாவில் உள்ள பத்திரிகைகளுக்குச் செய்திகளைத் தருவது ராய்ட்டர் என்னும் செய்தி நிறுவனமேயாகும். இந்நிறுவனம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான செய்திகளை மட்டுமே கொடுத்து வந்தது.

இதற்கிடையில் பாரதி, ரஷ்யாவில் நடைபெற்ற பல்வேறு புரட்சிகளைப் பற்றித் தொடர்ந்து கவனித்து உண்மையை உணர்ந்து அவ்வப்போது சுதேசமித்திரன், இந்தியா பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ரஷ்யப் புரட்சியை மட்டுமல்ல, உலக நாடுகளில் நடைபெற்று வந்த பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்தும் அவ்வப்போது கருத்துத் தெரிவிக்கும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். எங்கிருந்து பாரதிக்கு இந்தச் செய்திகள் கிடைத்தன என்பதை நாம் ஆராய்வோமானால், பல புதிய உண்மைகள் நமக்குத் தெரியவரும்.

1902-ஆம் ஆண்டு மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் வேலைக்குப் பாரதி சேர்ந்தார். அதற்குப் பிறகு சுதேசமித்திரன் பத்திரிகையில் துணையாசிரியராக பணியாற்றினார். பிறகு அவரே இந்தியா என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். ஆங்கிலேய அரசின் அடக்குமுறைக்குத் தப்பவும், சுதந்திரமாகத் தமது கருத்துக்களை எழுதி மக்களுக்குத் தெரிவிக்கவும், இந்தியா பத்திரிகை அலுவலகம் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது. பத்தாண்டுக்காலம் புதுச்சேரியிலேயே அவர் வாழ்ந்தார். 1921-ஆம் ஆண்டு சென்னையில் அவர் மறைந்தார்.

அதாவது, 1902-ஆம் ஆண்டு மதுரையில் ஆசிரியர் பணியில் சேர்ந்ததிலிருந்து, 1921-ஆம் ஆண்டு அவர் மறைந்தது வரையிலான பத்தொன்பது ஆண்டுகளில் அவர் வெளிப்படுத்தியிருக்கிற உலக ஞானம் வியப்புக்குரியது. எங்கிருந்து அதை அவர் பெற்றார் என்பது பெரும் புதிராகும். குறிப்பாக, அக்டோபர்ப் புரட்சியைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டு யுகப் புரட்சி எனப் பாரதி சரியாகக் கணித்தது எப்படி? என்ற கேள்வி உள்ளத்தைக் குடையும் கேள்வியாகும். 

இந்தியாவில் நடைபெற்ற தேசத் துரோகம் பற்றி ஆராய்வதற்காகப் பிரிட்டிஷ் அரசினால் நீதி அரசர் எஸ்.எ.டி. ரௌலட் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இந்தியாவில் புரட்சி வீரர்களின் நடவடிக்கைகள் பற்றித் தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.

1907-ஆம் ஆண்டில் வங்கத் தலைவரான விபின் சந்திரபால் தமிழ்நாட்டில் செய்த சுற்றுப்பயணம்தான் தமிழகத்தில் புரட்சி நடவடிக்கைகளுக்கு வித்திட்டது. சென்னை மாகாணத்தில் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் நீலகண்டப் பிரம்மச்சாரியும், வ.வே.சு. அய்யரும் ஆவார்கள் என்று இக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

தமிழ்நாட்டிற்கு விபின் சந்திரபாலரை அழைத்துவந்து கூட்டங்களில் பேசச் செய்தவர் பாரதியாரே என்பது நினைவுகூரத்தக்கதாகும். ஆகத் தமிழ்நாட்டில் புரட்சிகர நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் பாரதியாரும் இருந்தார் என்பது தெளிவாகிறது.

பாரதியை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட இந்தியா வார இதழின் மேலாளராக விளங்கிய எம்.பி. திருமலாச்சாரியா புதுச்சேரியிலிருந்து இலண்டனுக்குச் சென்று அங்கிருந்த புரட்சி வீரர்களான சியாம்ஜி கிருஷ்ணவர்மா, சாவர்க்கர், வ.வே.சு. அய்யர், டி.எஸ்.எஸ். இராசன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். பிறகு பாரிசுக்குச் சென்று மேடம் காமாவுடனும், பெர்லினுக்குச் சென்று வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயா, முகமது பரக்கதுல்லா, பூபேந்திரநாத் தத்தா, செண்பகராமன், சந்திரகாந்த் சக்கரவர்த்தி ஆகியோருடனும் இணைந்து செயல்பட்டார். 

1917-ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டாக் ஹோம் நகரில் இந்தியப் புரட்சிக் குழுவின் கிளை அமைக்கப்பட்டது. அதில் திருமலாச்சாரியும், வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயும் முக்கியப் பங்காற்றினார்கள். இந்தக் காலகட்டத்தில் ரஷ்ய சோசலிச ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புகொண்டிருந்தனர். இந்த அமைப்பின் முன்னணி உறுப்பினரான டிராயனாவ்ஸ்கி என்பவருடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தனர். 

லெனின் தலைமையில் இயங்கிய இந்தக் கட்சிதான் போல்ஷ்விக் கட்சி என அழைக்கப்பட்டது. 1917-ஆம் ஆண்டு அக்டோபர்ப் புரட்சி வெற்றி பெற்று லெனின் தலைமையில் அரசு அமைக்கப்பட்ட பிறகு, 1919-ஆம் ஆண்டில் திருமலாச்சாரியும், பிற புரட்சியாளர்களும் மாஸ்கோ சென்று லெனினைச் சந்தித்தனர்.

1921-ஆம் ஆண்டு மூன்றாம் அகிலத்தின் மாநாடு நடைபெற்ற போது அதில் கலந்துகொள்வதற்காக அனுப்பிய கடிதத்தில் தன்னை ஒரு உறுதியான கம்யூனிஸ்ட் எனத் திருமலாச் சாரியா பதிவு செய்திருக்கிறார். ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமானவர்களான யா.இசட். சுரிக்ட்ஸ், ஐ.எம்.ரேய்ஸ்னர் ஆகியோர் தம்மை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக உறுதி கூறியுள்ளனர் என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பாரதிக்குக் கிடைத்த இதழ்கள்

புதுச்சேரியில் பாரதி வாழ்ந்த போது, இந்தியா (நாளிதழ்), விஜயா, சூர்யோதயம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளையும், பால பாரத் என்னும் ஆங்கில வார இதழையும் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது, வெளிநாட்டுப் பத்திரிகைகள் சிலவும், வெளிநாட்டில் வாழ்ந்த இந்தியப் புரட்சியாளர்கள் நடத்திய பத்திரிகைகளும் அவருக்குத் தவறாமல் கிடைத்திருக்கின்றன. சென்னையில் பாரதி இருந்திருந்தால் இந்த பத்திரிகைகள் அனைத்தையும் ஆங்கிலேய அரசு பறிமுதல் செய்திருக்கும். பிரெஞ்சு ஆட்சியில் உள்ள புதுச்சேரியில் அவர் வாழ்ந்ததால், அவருக்கு இந்த பத்திரிகைகள் தங்குத் தடையில்லாமல் கிடைத்தன. 

திருமதி. காமா அம்மையார் நடத்திய வந்தே மாதரம், தால்வார் என்னும் இதழ்கள் பாரிசிலிருந்து வெளியிடப்பட்டன. இந்த பத்திரிகைகளை அச்சிடுவதற்கும், வெளியிடுவதற்குமான பொறுப்பை திருமலாச்சாரியா ஏற்றிருந்தார். மற்றொரு புரட்சிக்காரரான சியாம்ஜி கிருஷ்ணவர்மா, இந்தியன் சோசியாலஜிஸ்ட் என்ற பத்திரிகையைப் பாரிசிலிருந்து நடத்தினார்.
மேற்கண்ட பத்திரிகைகள் அனைத்தையும் புதுச்சேரியில் உள்ள இந்தியா பத்திரிகை அலுவலகத்திற்கும் மற்றும் இந்தியாவில் உள்ள பிற புரட்சியாளர்களுக்கும் அனுப்பும் பொறுப்பை திருமலாச்சாரியா ஏற்றுக்கொண்டு அவற்றைத் தவறாமல் அனுப்பினார்.

அமெரிக்காவில் உள்ள அயர்லாந்து தேசியவாதிகள் கெய்லிக் அமெரிக்கன் என்ற பத்திரிகையை நடத்தினார்கள். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக அப்பத்திரிகையில் கட்டுரைகள் வெளியாயின. இந்தியாவில் உள்ள புரட்சிக்காரர்களோடும் அவர்களுக்கு தொடர்பு இருந்தது. 1906-ஆம் ஆண்டு புதுச்சேரியில் திருமலாச்சாரியா இருந்த காலத்திலிருந்தே இந்தியா பத்திரிகை அலுவலகத்திற்கு இந்தப் பத்திரிகை தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தது. இந்தியா பத்திரிகையிலும், கெய்லிக் அமெரிக்கன் இதழில் வெளிவந்த கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

இலண்டனில் வாழ்ந்த வ.வே.சு. அய்யர், 1908-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வாரந்தோறும் "இந்தியா' பத்திரிகைக்குக் கடிதங்கள் அனுப்பிக்கொண்டே இருந்தார். அக்கடிதங்களில் உலக அரசியல் நிலை குறித்தும், புதுச்சேரியில் உள்ள தேசப் பக்தர்கள் என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்தும் அவர் எழுதினார். இக்கடிதங்களின் மூலமும் பாரதிக்கு உலக அரசியல் நிலைமைகள் தெரிந்திருக்கவேண்டும்.

இலண்டனிலிருந்த வ.வே.சு. அய்யர், புதுச்சேரியில் உள்ள இந்தியா பத்திரிகை அலுவலகத்திற்குக் கடிதங்கள், அரசுக்கு எதிரான வெளியீடுகள், புத்தகங்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்தார் என்றும், அவற்றை ஆங்கிலேய அரசு பறிமுதல் செய்து கைப்பற்றியது என்ற விவரம் பிரிட்டனின் வெளியுறவுத் துறை இரகசிய குறிப்புகளில் காணப்படுகிறது.

எனவே, மேற்கண்ட வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வெளியான ரஷ்யப் புரட்சி மற்றும் பிற நாட்டு முக்கிய நிகழ்ச்சிகள் குறித்த செய்திகளைப் பாரதி படித்திருக்கவேண்டும்.

தொடர்ச்சி 2-ஆம் பக்கம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com