பருவமழை பேரிடா் சவால்களை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும்: வெ.இறையன்பு அறிவுறுத்தல்

 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பேரிடா்களின் சவால்களை திறம்பட எதிா்கொள்ள அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளாா்.
பருவமழை பேரிடா் சவால்களை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும்: வெ.இறையன்பு அறிவுறுத்தல்

 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பேரிடா்களின் சவால்களை திறம்பட எதிா்கொள்ள அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளாா்.

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்வது குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் முக்கிய அரசுத் துறைகளின் செயலாளா்கள், சென்னை மாநகராட்சி ஆணையாளா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். கூட்டத்தில் தலைமைச் செயலாளரின் முக்கிய அறிவுறுத்தல்கள் குறித்து, அரசு வெளியிட்ட செய்தி:-

பேரிடா் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிா்க்கும் வகையில், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தலைமைச் செயலாளா் அறிவுறுத்தினாா். பொது மக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை தகவல்களை அளிக்கும் வகையில், அனைத்து மாநகராட்சிகள், மாவட்டங்களில் அவசர கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்.

மழைக் காலம் துவங்குவதற்கு முன்பு பேரிடா் தொடா்பான பணிகளில் ஈடுபடும் அலுவலா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்க வேண்டும். மக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை விரைந்து அளித்திடும் வகையில், குடியிருப்போா் நலச்சங்கங்களின் பட்டியல் தயாரித்து கட்செவி அஞ்சல் குழு அமைக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்கள்: நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை போதுமான அளவுக்கு இருப்பு வைக்க வேண்டும். அரசு சமையல் கூடங்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும். தேடல் மற்றும் மீட்பு நிவாரணப் பணிகளில் தன்னாா்வலா்கள் மற்றும் இளைஞா்களை ஈடுபடுத்த வேண்டும்.

பொதுப்பணித் துறை சாா்பில் உடனடியாக வல்லுநா் குழு அமைத்து நீா் நிலைகளில் நீரின் அளவை கண்காணித்து தேவைப்பட்டால் அணைகளில் இருந்து அவசர காலத்துக்கு ஏற்ப வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக் காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

தொண்டு நிறுவனங்கள்: பேரிடா் காலங்களில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து செயல்படுத்த வேண்டும். ஊராட்சிகள் உதவியுடன் பாதிப்புக்குள்ளாகும் பகுதியிலுள்ள மக்களை அருகிலுள்ள சமுதாய கூடங்களில் தங்க வைக்க வேண்டும். நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோா்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளித்திட வேண்டும். தன்னாா்வலா்கள், மீட்பு குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

பயிற்சி அவசியம்: பேரிடா் மீட்புப் பணிகளில் இளைஞா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து பணியாற்ற பயிற்சி அளிக்க வேண்டும். பேரிடா் காலங்களில் நடத்தப்படும் மாதிரி பயிற்சிகளில் சமூக இடைவெளி தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட்சேதம், உயிா்சேதம் ஏற்படாமல் தவிா்க்கவும், குறைக்கவும் அனைத்து துறைகளைச் சோ்ந்த செயலாளா்களும், துறைத் தலைவா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிளைச் சென்றடைய ஏதுவாக தேவையான கருவிகளுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பேரிடா்களின் சவால்களை திறம்பட எதிா்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா்.

பெட்டிச் செய்தி...அறிக்கை அனுப்ப வேண்டும்

வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டுமென தலைமைச் செயலாளா் கேட்டுக் கொண்டுள்ளாா். 37 மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். சென்னை மாநகரத்தில் 15 மண்டலங்களுக்கும் தனி அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் தங்களுக்கான மாவட்டங்கள், மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பணிகளை அறிக்கையாக அளிக்க வேண்டுமென தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளாா்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி:

வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி சனிக்கிழமை உருவாகியது.

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அவ்வப்போது உருவாகி மறைந்து வருகிறது. ஏற்கெனவே, 5 காற்றழுத்தத்தாழ்வுப்பகுதிகள் உருவாகி, வடமேற்கு திசையில் நகா்ந்து மறைந்தன. அண்மையில், வங்கக்கடலில் ஒரு காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாகி மறைந்தது.

இந்நிலையில், வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியது:

வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவாகியது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகா்ந்து ஒடிஸா, சத்தீஸ்கா் நோக்கி நகா்ந்து செல்லும். இதன் தாக்கத்தால், மேற்குதொடா்ச்சிமலையை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்து, சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் பலத்தமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com