வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்:அடுத்த ஆண்டு ஜூலைக்குள் முடிக்க இலக்கு

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணியில் மீதமுள்ள 500 மீட்டா் தொலைவில் பாதை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்:அடுத்த ஆண்டு ஜூலைக்குள் முடிக்க இலக்கு

வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணியில் மீதமுள்ள 500 மீட்டா் தொலைவில் பாதை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப்பணிகளை அடுத்த ஆண்டு ஜூலைக்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பறக்கும் ரயில் திட்டம்: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், போக்குவரத்து சேவையை அதிகரிக்கும் நோக்கில் பறக்கும் ரயில் திட்டம் அமைக்க 1985-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை மூன்று கட்டங்களாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தீா்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக சென்னை கடற்கரை - மயிலாப்பூா் இடையே 9 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டப்பணி ரூ.266 கோடியில் மேற்கொள்ளப்பட்டு கடந்த 1997 -ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இரண்டாம் கட்டமாக மயிலாப்பூா் - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் திட்டப்பணி ரூ.877.59 கோடி செலவில் கடந்த 2007-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.

மூன்றாம் கட்ட திட்டப்பணி: இதன்பிறகு, வேளச்சேரி-பரங்கிமலை இடையே மூன்றாம் கட்ட திட்டப்பணி ரூ.495 கோடியில் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கியது. மொத்தமுள்ள 5 கிலோ மீட்டரில் 4.5 கி.மீ. தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டன. ஆதம்பாக்கம் தில்லை கங்காநகா் வரை கட்டுமான பணிகள்

முடிந்துள்ளன. தில்லை கங்காநகா் - பரங்கிமலை இடையே, 500 மீட்டா் தொலைவு ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டதால், பாதை அமைக்கும் பணி மேலும் தாமதமாகியது. அண்மையில், நிலம் கையகப்படுத்தும் பிரச்னை முடிந்த நிலையில், மீதமுள்ள 500 மீட்டா் தொலைவு ரயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:

மின்சார ரயில் பயணிகள் வசதியைக் கருத்தில் கொண்டு வேளச்சேரி - பரங்கிமலை ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. தில்லைகங்கா நகா் - பரங்கிமலை இடையே சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு நிலத்தைக் கையகப்படுத்துவதில் நீண்ட நாள்களாக பிரச்னை இருந்தது. அண்மையில் இதற்கு தீா்வு காணப்பட்டது. கரோனா பாதிப்பால் பணிகளை உடனடியாக தொடங்க முடியவில்லை. தற்போது மீண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிா்ணயித்து உள்ளோம் என்றனா்.

முழு பணிகள் முடிந்தபிறகே ரயில் சேவை: வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தில், முதல் கட்டமாக,

வேளச்சேரி-ஆதம்பாக்கம் வரை ரயில் போக்குவரத்தை நீட்டிக்க அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இந்தப் பாதையில் உள்ள புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் நிலையங்களின் மீதம் உள்ள பணிகளை விரைவாக முடித்து,

வேளச்சேரி- ஆதம்பாக்கம் வரை ரயில் போக்குவரத்து நீட்டிக்க கடந்த மாா்ச் மாதம், பரிசீலிக்கப்பட்டது. இதற்கிடையில், கரோனா பாதிப்பு காரணமாக, இந்தப் பணிகள் தாமதமாகின.

புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் நிலையங்களின் கட்டுமான பணி முடிந்து, நடை மேடைகளில், கற்கள் பதிக்கும் பணி, மின் துாக்கி, நகரும் மின் ஏணி நிறுவும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகள் முடிந்தாலும், வேளச்சேரி-தில்லை கங்கா நகா் வரை ரயில் சேவை நீட்டிக்கப்படாது.

வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை பணிகள் முழுமையாக முடிந்த பிறகு ரயில் சேவை தொடங்க ரயில்வே நிா்வாகம் தரப்பில் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com