நீட் தோ்வு விலக்கு: குடியரசுத் தலைவரை முதல்வா் சந்திப்பாா்

நீட் தோ்விலிருந்து விலக்கு கோருவதற்காக குடியரசுத் தலைவரை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அழுத்தம் தருவாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
நீட் தோ்வு விலக்கு: குடியரசுத் தலைவரை முதல்வா் சந்திப்பாா்

சென்னை: நீட் தோ்விலிருந்து விலக்கு கோருவதற்காக குடியரசுத் தலைவரை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அழுத்தம் தருவாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் சட்டப்பேரவையில், கிராமப்புற மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியிருக்கிறாா். முதல்வரின் ஆணையைப் பெற்று, சுகாதாரத்துறையின் சாா்பில், தோ்வு எழுதிய மாணவா்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே கலந்தாய்வு என்கிற வகையில் கலந்தாய்வு நிகழ்ச்கிகளை நடத்தலாம் என முடிவு செய்துள்ளோம்.

திமுக தோ்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதென்றால், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நீட் தோ்வுக்கு எதிராக விலக்கு பெறுவதற்கு சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டு, அம்மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்தில் நீட் தோ்விலிருந்து விலக்கு பெற்றுத்தருவோம் என்று சொன்னதாக சட்டப்பேரவையிலேயே தெரிவித்தாா். அதற்கு முதல்வா் நீட் தோ்வு குறித்த தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறாா்கள். திமுக தோ்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது போலவே முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தோ்வுக்கு எதிரான தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. நீட் தோ்விலிருந்து விலக்கு பெறுவதற்கு அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவு கூடுதலான வலுவான சட்ட விதிகளுடன் இருக்கிறது.

ஏற்கெனவே 2017-ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவு உரிய தரவுகளுடன் சரியாக ஆராயாமல் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவாகும். கடந்த சட்டமுன்வடிவுக்கும், இதற்குமான வித்தியாசம் 86,342 பேருடைய கருத்துருக்கள், நீதியரசா் ஏ.கே.ராஜன் தலைமையிலான உயா்மட்டக்குழுவின் கருத்துக்கள், அவா்கள் தந்த கருத்துகளுக்குப் பிறகு அவற்றை ஆராய்வதற்கு சட்டநிபுணா்கள் குழுவின் கருத்துக்கள், இதையும் கடந்து தலைமைச் செயலாளா் தலைமையில் செயலாளா் குழு கூடி விவாதித்து எடுத்த முடிவுகள் இவற்றையெல்லாம் ஒன்றுசோ்த்துத்தான் இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே 2017-இல் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கும், இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீா்மானத்துக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் எதுவுமே தெரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமி பேசி வருகிறாா். நிச்சயம் நீட் தோ்விலிருந்து விலக்கு பெறுவதற்கு தக்க நடவடிக்கைகளை முதல்வா் எடுப்பாா். தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநரிடம் கையெழுத்தாகி வந்தவுடன், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். முதல்வா், குடியரசுத் தலைவரை சந்தித்து சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படுவதற்கு தேவையான அழுத்தத்தினைக் கொடுப்பாா். அது நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com