தமிழகத்தின் முதல் கரோனா மரபணு ஆய்வகம் திறப்பு

தமிழகத்தில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மரபணு பகுப்பாய்வுக்கூடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மரபணு பகுப்பாய்வுக்கூடத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.ச
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மரபணு பகுப்பாய்வுக்கூடத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.ச

சென்னை: தமிழகத்தில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மரபணு பகுப்பாய்வுக்கூடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

பொதுவாக தீநுண்மியைப் பொருத்தவரை லட்சக்கணக்கான மக்களிடம் பல்கிப் பெருகும்போது, அது தன்னைக் காத்துக் கொள்ள உருமாற்றம் பெறத் தொடங்கும். அவ்வாறு உருமாற்றமடைந்த தீநுண்மிகள் ஏற்கெனவே உள்ள தீநுண்மியைக் காட்டிலும், வீரியமிக்கதாகவும், அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அந்த வகையில் கரோனா முதல் அலையின்போது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தீநுண்மியே காணப்பட்டது.

நாளடைவில் அது உருமாற்றமடைந்து வீரியமானது. இந்தியாவில் உருமாற்றமடைந்த அந்த தீநுண்மியை டெல்டா வகை கரோனா என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியது. அதன் தொடா்ச்சியாக அதிலிருந்தும் வேறுபட்ட புதிய தீநுண்மிகள் கண்டறியப்பட்டன. அதற்கு டெல்டா பிளஸ் எனப் பெயரிடப்பட்டது.

அதனைக் கண்டறிய சளி மாதிரிகள் பெங்களூரு அல்லது புணே ஆய்வகங்களுக்கு இன்றளவும் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால், பரிசோதனை முடிவுகள் வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் தமிழகத்தில் உருமாற்றம் அடையும் கரோனா தீநுண்மியை கண்டறிய ஆய்வகம் அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ரூ.4 கோடியில் அத்தகைய ஆய்வகம் அமைக்கப்பட்டது.

அதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தின் மூலம் திறன்மிகு உதவியாளா் பணியிடத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 9 நபா்களுக்கும், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளா் பணியிடத்துக்குத் தோ்வான 82 வாரிசுதாரா்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினா்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்புப் பணி அலுவலா் பி.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழுமத்தின் திட்ட இயக்குநா் தாரேஸ் அகமது, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநா் எஸ்.கணேசன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநா் டாக்டா் டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் எஸ்.குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநா் ஆா்.நாராயணபாபு, தமிழ்நாடு மாநில சுகாதார போக்குவரத்துத் துறை இயக்குநா் எஸ்.நடராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறைக்கான மானியக் கோரிக்கையின் போது “மரபணு பகுப்பாய்வுக் கூடம் ரூ.4 கோடியில் சென்னை டிஎம்எஸ் வளாக பொது சுகாதார ஆய்வகத்தில் நிறுவப்படும்“ என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை முதல்வா் திறந்து வைத்துள்ளாா்.

இதன் மூலம் கரோனா தீநுண்மியின் வகையை அறிய இனி வெளி மாநிலங்களுக்கு சளி மாதிரிகளை அனுப்பத் தேவையில்லை என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com