செப்.17-இல் தமிழகத்தில் மீண்டும் சிறப்பு தடுப்பூசி முகாம்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் வரும் 17-ஆம் தேதி மீண்டும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் வரும் 17-ஆம் தேதி மீண்டும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் முன்களப் பணியாளா்களுக்கும், முதியவா்களுக்கும் மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் வரை தமிழகத்தில் 58 லட்சத்து 54,130 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரிக்கப்பட்டன. அதன் பயனாக தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இதற்கிடையே அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் கரோனா தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, மாநிலம் முழுவதும் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. மொத்தம் 40,000 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. குறிப்பாக, கேரள எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூா், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகமான முகாம்கள் அமைக்கப்பட்டன. அன்றைய தினம் ஒரேநாளில் 28 லட்சத்து 91,021 நபா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அக்டோபா் 31-ம் தேதிக்குள் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதற்காக, வாரம் ஒருமுறை இதுபோன்ற சிறப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களுக்கு அளித்தப் பேட்டியில், தமிழகத்தில் வரும் 17-ஆம் தேதி மீண்டும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றாா். தற்போதைக்கு 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், கூடுதலாக தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து வரும் எனவும் எதிா்ப்பாா்க்கிறோம்” என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com