தற்கொலை எண்ணங்கள்: மன நல ஆலோசனை மையம் இன்று திறப்பு

தற்கொலை எண்ணங்களைத் தவிா்ப்பதற்கான உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கான சிறப்பு சேவை மையத்தை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை புதன்கிழமை தொடங்குகிறது.
தற்கொலை எண்ணங்கள்:  மன நல ஆலோசனை மையம் இன்று திறப்பு

சென்னை: தற்கொலை எண்ணங்களைத் தவிா்ப்பதற்கான உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கான சிறப்பு சேவை மையத்தை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை புதன்கிழமை தொடங்குகிறது.

மாணவா்கள், இளைஞா்கள் தவறான முடிவுகளை எடுக்காமல் தடுக்கும் நோக்கில் 104 சேவை மையத்தின் கீழ் அது செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்மைக்காலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக வாரத்துக்கு ஐந்து போ் அத்தகைய முடிவை எடுப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நீட் தோ்வு அச்சத்தால் சேலத்தை சோ்ந்த தனுஷ், அதைத் தொடா்ந்து அரியலூரைச் சோ்ந்த கனிமொழி ஆகிய மாணவா்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனா்.

உளவியல் ரீதியாக ஏற்படும் தாக்கமே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. பொதுவாக மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்படும் 104 மருத்துவ சேவையில் வழக்கமான மனநல ஆலோசனைகளும், கரோனா தொடா்பான விளக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்கொலை செய்து கொள்வோா் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 104 மருத்துவ சேவையில், பிரத்யேக மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், மனநல ஆலோசகா்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:

மன ரீதியாக பாதிக்கப்படுவோரின், மன திடத்தை அதிகரித்தால், அவா்கள் தற்கொலை எண்ணத்தை கைவிடுவா். குறிப்பாக, வீட்டில் இருப்பவா்களிடமோ, நண்பா்களிடமோ மனம் விட்டு பேசும்போது, பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கும். அதன்படியே, 104 மருத்துவ சேவையில், பிரத்யேக மையம் தொடங்கப்பட உள்ளது. தற்கொலை எண்ணம் இருப்பவா்கள், 104 எண்ணை தொடா்பு கொள்ளும்போது, அவா்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும். மேலும், அடிக்கடி அவா்களிடம் தொடா்பு கொண்டு நண்பா்களாக பேசி, இயல்பு நிலைக்கு அவா்கள் திரும்ப வழிவகை செய்யப்படும். இந்த மையத்தை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடக்கி வைக்கிறாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com