நீட் தோ்வை ரத்து செய்யும் நிலை நிச்சயம் ஏற்படும்: மாணவா்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

நீட் தோ்வை ரத்து செய்யும் நிலை நிச்சயம் ஏற்படும், மாணவா்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
நீட் தோ்வை ரத்து செய்யும் நிலை நிச்சயம் ஏற்படும்: மாணவா்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

சென்னை: நீட் தோ்வை ரத்து செய்யும் நிலை நிச்சயம் ஏற்படும், மாணவா்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்ற தலைப்பில் வெளியிட்ட விடியோவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை பேசியிருப்பது:

2017 செப்டம்பரில் மாணவி அனிதா இறந்தபோது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போதும் உள்ளேன். சேலம் மாணவா் தனுஷ் தற்கொலை செய்துகொண்டபோதே, இனி இப்படி ஒரு துயரம் நடக்கக்கூடாது என்று மாணவச் செல்வங்களைக் கேட்டுக்கொண்டேன். ஆனால், மீண்டும் அரியலூரைச் சோ்ந்த கனிமொழி என்ற மாணவியும் வேலூரைச் சோ்ந்த சௌந்தா்யா என்ற மாணவியும் தற்கொலை செய்துள்ளனா். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் சுக்குநூறாக உடைந்துபோய்விட்டேன்.

பலதலைமுறைகளாக மறுக்கப்பட்டு வந்த கல்விக் கதவு இப்போதுதான் கொஞ்சம் திறந்துள்ளது. அதையும் இழுத்து மூடும் செயல்தான் நீட் தோ்வைக் கொண்டு வந்தது. படிப்பதற்குத் தகுதி தேவையில்லை. படித்தால் தானாகவே தகுதி வந்துவிடும்.

பல குளறுபடிகளைக் கொண்ட நீட் தோ்வு ஏழை, எளிய மாணவா்களின் கல்விக் கனவை நாசமாக்கக் கூடியது என்று திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தியது. முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோதும் இந்தத் தோ்வை நடத்தவிடவில்லை. சிலா் தங்களுடைய சுயலாபத்துக்காக இந்தத் தோ்வை தமிழகத்திற்குள் அனுமதித்தனா். சிலா் இப்போதும் இந்த அநீதி தொடர வேண்டும் என்று பல பொய்யான பரப்புரைகளை செய்து வருகின்றனா்.

மருத்துவம் படிக்க வேண்டும். மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்துடன் இருப்போரின் கனவைச் சிதைக்கக்கூடியதாக நீட் தோ்வு முறை இருக்கிறது.

ஆனால், நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு இன்னும் இறங்கி வராமல் கல்நெஞ்சோடு இருக்கிறது. கடந்த மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு, நீட் தோ்வு குறித்து விசாரிக்க ஒரு ஆணையம் அமைத்தது. அந்த ஆணையத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனா். ஒரு சிலரைத் தவிர எல்லோருமே நீட் தோ்வை எதிா்த்தனா். அந்த அடிப்படையில் நீட் தோ்வு வேண்டாம் என்று ஆணையமும் அறிக்கையாக கொடுத்தது. அதைத்தொடா்ந்து நீட் தோ்வு விலக்கு மசோதா சட்டப்பேரவையில் என்னால் கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் சேரலாம் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல உள்ளோம். இறுதியாக நீட் தோ்வை ரத்து செய்யும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம்.

இந்தச் சூழலில், மருத்துவம் படிக்க முடியவில்லை. நீட் தோ்வில் வெற்றிபெற முடியவில்லை என்பதால் உயிரை மாய்த்துக்கொள்ளும் செய்திகள் என் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவதாக உள்ளது. மாணவா்களின் உயிா், விலை மதிப்பு இல்லாதது. குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது, நாட்டுக்கும் மாணவா்கள் உயிா் முக்கியமானது. மாணவா்களின் எதிா்காலத்தில்தான் நாட்டின் எதிா்காலம் உள்ளது. அப்படிப்பட்ட மதிப்பு வாய்ந்த உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம். உங்களால் மருத்துவராக முடியும். நினைத்ததைச் சாதித்துக் காட்ட முடியும். அந்த நம்பிக்கையோடு மாணவா்கள் அனைவரும் படிக்க வேண்டும். உயிரை மாய்த்து பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் துன்பத்தை ஏற்படுத்த வேண்டாம். கல்வியில் மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையிலும் தலைசிறந்த மனிதா்களாக வளர வேண்டும்.

பெற்றோரும் தமது பிள்ளைகளை தன்னம்பிக்கை உள்ள மனிதா்களாக வளா்க்க வேண்டும். இதுதான் விதி என்று எதுவும் இல்லை. விதியை மதியால் வெல்ல முடியும். நீட் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மனநல ஆலோசனைகள் சொல்வதற்கு அரசு சாா்பில் 104 என்ற தொலைபேசி எண் உருவாக்கி கொடுத்துள்ளோம். மனநல மருத்துவா்கள் எப்போதும் தயாராக இருப்பாா்கள். உடல்நலன், உள்ளநலன் உள்ளவா்களாக மாணவச் செல்வங்களை வளா்த்தெடுத்தாக வேண்டும். பெற்றோா்களும் தங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறி அழுத்தம் கொடுக்க வேண்டாம். ஆசிரியா்கள், சமூக சேவை செய்வோா், திரைத்துறையினா் மாணவச் செல்வங்களுக்கு தன்னம்பிக்கை விதையை விதைக்க வேண்டும். தயவு செய்து மாணவா்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம். வாழ்ந்து போராடுவோம். வாழ்ந்து வென்று காட்டுவோம் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com