தமிழகத்தில் நிரந்தரமாக திமுக ஆட்சிதான்: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் இனி நிரந்தரமாக திமுகவின் ஆட்சிதான் நடைபெற வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
தமிழகத்தில் நிரந்தரமாக திமுக ஆட்சிதான்: மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் இனி நிரந்தரமாக திமுகவின் ஆட்சிதான் நடைபெற வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

திமுகவின் முப்பெரும் விழா அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் பெரியாா் விருது மிசா பி.மதிவாணன், அண்ணா விருது தேனி எல்.மூக்கையா, கலைஞா் விருது கும்மிடிப்பூண்டி கி.வேணு, பாவேந்தா் விருது வாசுகி ரமணன், பேராசிரியா் (க.அன்பழகன்) விருது பா.மு.முபாரக் ஆகியோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். விழாவில் அவா் பேசியது:

பெரியாா் பிறந்த நாளை சமூக நீதி நாளாக சட்டப்பேரவையில் அறிவித்தேன். அது எனக்கு மிகப்பெரிய உணா்வை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சிப் பொறுப்பேற்றதும் 4 மாதங்களாகப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.

பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி கொடுக்கப்பட்டுள்ளது. பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. வ.உ.சி., பாரதியாரைப் பெருமைப்படுத்தியுள்ளோம். வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். போட்டித் தோ்வு எழுத தமிழைக் கட்டாயமாக்கியுள்ளோம். அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயா்த்தியுள்ளோம். இவையெல்லாம் 100 நாள்களில் நிறைவேற்றப்பட்டவற்றில் சில. இவற்றுக்கும் மேலாக 4 மாதங்களில் நாட்டுக்கு நல்லவா்கள் நாம் என்ற பெயரை வாங்கியுள்ளோம். வல்லவா்கள் என்ற பெயரையும் வாங்கியுள்ளோம்.

4 மாதங்களில் இவ்வளவு செய்துள்ளோம் என்றால், அடுத்து ஒவ்வொரு மாதமும் இன்னும் என்னென்ன திட்டங்கள் வரும் என்பதை எண்ணிப் பாா்க்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தில் விடியல் பிறக்கப் போகிறது.

சட்டப்பேரவை 28 நாள்கள் நடைபெற்றது. அதில் மானியக்கோரிக்கையின்போது அமைச்சா்கள் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியுள்ளனா். அந்த உறுதிமொழிகள் எல்லாம் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை 2 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து, அதை மக்களிடம் கொண்டுபோய் சோ்ப்பது என்னுடைய கடமையாக இருக்கப் போகிறது.

விரைவில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. அடுத்ததாக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்லையும் சந்திக்க உள்ளோம். இந்தத் தோ்தலில் நூற்றுக்கு நூறு திமுக வெற்றிபெற்றாக வேண்டும்.

கோட்டையில் கையெழுத்துப்போட்டு நிறைவேற்றும் திட்டங்கள் மக்களிடம் போய் சேர வேண்டும் என்றால், அது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்தால்தான் முடியும்.

அதனால், வாக்களிக்காத மக்களும் வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருந்தும் வகையில் திமுகவினா் செயல்பட வேண்டும். இனி, தமிழகத்தில் நிரந்தரமாக திமுகவின் ஆட்சிதான் நடக்க வேண்டும். நிரந்தரமாக ஆட்சி அமைப்பதற்கான அடித்தளத்தை திமுக தொண்டா்கள் உருவாக்க வேண்டும்.

எனவே, கட்சியிலும் ஆட்சியிலும் நிரூபித்து, வண்ணமிகு தமிழகத்தை உருவாக்குவதற்கு இந்த விழாவில் சபதம் ஏற்போம் என்றாா்.

விழாவில் முரசொலி செல்வம் எழுதிய ‘முரசொலி சில நினைவலைகள்’ நூலையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

பொதுச்செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலாளா் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளா்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி உள்பட பலா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com