கே.சி.வீரமணி வீட்டில் சோதனை: அதிமுக கண்டனம்

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துவதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.  
கே.சி.வீரமணி வீட்டில் சோதனை: அதிமுக கண்டனம்

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்துவதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்குத் தோல்வி ஏற்படும் என்று சந்தேகப்படும் மாவட்டங்களில், அதிமுக செயல் வீரர்களின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் விதத்தில், முக்கிய நிர்வாகிகளை செயல்பட விடாமல் தடுக்கும் நோக்கத்தின் முதல்படியாக இன்று, கே.சி. வீரமணி வீட்டில் நடத்தப்படும் சோதனையை ஒரு பழிவாங்கும் படலமாகவே அரசியல் பார்வையாளர்களும், பொதுமக்களும் பார்க்கிறார்கள்.
இத்தகைய சலசலப்புகளுக்கும், பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் நிர்வாகிகளும், ரத்தத்தின் ரத்தமான கழக செயல் வீரர்களும், என்றும் அடிபணிந்ததில்லை. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எப்போதுமே சட்டத்தின் ஆட்சியைத்தான் தமிழகத்தில் நடத்தி வந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வழிவந்த, ஜெயலலிதா அரசும் சட்டப்படிதான் தமிழகத்தை ஆட்சி செய்து வந்தது. எனவே, இத்தகைய ஒடுக்குமுறைகளை சட்டத்தின் துணைகொண்டு எதிர்கொள்வோம்; வெற்றி பெறுவோம்.
அதிமுக நிர்வாகிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததற்கு நிதிப் பற்றாக்குறை என்றும், நீட் தேர்வு ஒழிப்பு என்பது மத்திய அரசின் மூலம் குடியரசுத் தலைவரால்தான் முடியும் போன்ற சாக்கு போக்குளைக் கூறாமல், தேர்தல் சமயத்தில் அளித்த 505-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதிமுக ஆட்சியில் தமிழ் நாடு சிறந்த நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு, தொழில் துறை, உணவு உற்பத்தி உள்ளிட்ட அனைத்து முக்கியமான துறைகளில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்ததையும், கரோனா நோய்த் தொற்று தடுப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்ததையும் மனதில் நிலைநிறுத்தி, அதுபோல் தமிழ் நாட்டைத் தொடர்ந்து முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

அரசியல் கட்சிகளை மிரட்டி, அதன்மூலம் மக்களைப் பணிய வைத்து, தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்க வைத்துவிடலாம் என்று மனப்பால் குடிக்காமல், ``மக்களைப் பார்த்து ஆளுகிறவர்கள் அஞ்ச வேண்டும். ஆளுவோரைப் பார்த்து மக்கள் அஞ்சக்கூடாது. அதுதான் உண்மையான ஜனநாயகம்’’ என்ற அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப ஜனநாயக முறையில் தேர்தலைச் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com