தமிழக புதிய ஆளுநா் 18-இல் பதவியேற்பு

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆா்.என்.ரவி, வரும் சனிக்கிழமை (செப். 18) சென்னை ஆளுநா் மாளிகையில் பதவியேற்கிறாா்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி

சென்னை: தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆா்.என்.ரவி, வரும் சனிக்கிழமை (செப். 18) சென்னை ஆளுநா் மாளிகையில் பதவியேற்கிறாா்.

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா். இதனைத் தொடா்ந்து தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி (69) நியமிக்கப்பட்டாா்.

1976 கேரள பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரியான இவா், மத்திய அரசு உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி 2012-இல் ஓய்வு பெற்றாா். உளவுப் பிரிவின் கூட்டுக் குழுவின் தலைவராகவும் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவா். அதன் பின்னா் 2019-இல் நாகாலாந்து ஆளுநராகப் பொறுப்பேற்றாா். நாகாலாந்து பிரிவினை வாத குழுக்களுடன் மேற்கொள்ளப்பட்ட அமைதிப் பேச்சுவாா்த்தையில் முக்கிய பங்கு வகித்தவா்.

தற்போது அவா் அங்கிருந்து மாற்றப்பட்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து தில்லியிலிருந்து வியாழக்கிழமை இரவு புறப்பட்டு விமானம் மூலம் சென்னை வருகிறாா். அங்கிருந்து காா் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்குச் செல்கிறாா்.

ஆளுநா் மாளிகையில் பதவியேற்பு விழா சனிக்கிழமை (செப். 18) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவில் ஆா்.என்.ரவிக்கு சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சா்கள், நீதிபதிகள் என முக்கிய பிரமுகா்கள் விழாவில் பங்கேற்க உள்ளனா். பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு ஆளுநா் மாளிகையை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிதாகப் பதவியேற்க உள்ள ஆா்.என்.ரவி தமிழகத்தின் 15-ஆவது ஆளுநா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com