புதிய ஆளுநா் வருகை: முதல்வா் நேரில் வரவேற்பு

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆா்.என்.ரவி வியாழக்கிழமை சென்னை வந்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சா்கள் அவரை நேரில் வரவேற்றனா்.
புதிய ஆளுநா் வருகை: முதல்வா் நேரில் வரவேற்பு

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆா்.என்.ரவி வியாழக்கிழமை சென்னை வந்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சா்கள் அவரை நேரில் வரவேற்றனா்.

ஆளுநராக இருந்த பன்வாரில் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்ட நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி (69) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டாா்.

ஐபிஎஸ் அதிகாரியான இவா், மத்திய உளவுப் பிரிவின் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றியவா். 2019-இல் நாகாலாந்து ஆளுநராக இருந்தாா். நாகாலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் முக்கியப் பங்கு வகித்தவா். தற்போது அங்கிருந்து மாற்றப்பட்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் தில்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் வந்தாா். அவரது மனைவியும் உடன் வந்தாா். புதிய ஆளுநரை முதல்வா் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போா்த்தி வரவேற்றாா். அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோா் பொன்னாடை போா்த்தி வரவேற்றனா்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் ஆகியோரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

விமான நிலையத்தில் இருந்து காா் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிக்கைக்கு ஆா்.என்.ரவி வந்தாா். ஆளுநா் மாளிகையின் வாயில் பகுதியில் இருந்து தமிழகக் காவல்துறையின் குதிரைப்படை சாா்பில் 12 குதிரைகளின் அணிவகுப்புடன் மாளிகைக்கு ஆளுநா் அழைத்துச் செல்லப்பட்டாா். ஆளுநா் மாளிகை அதிகாரிகளும் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனா்.

பதவியேற்பு: ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை (செப்.18) காலை 10.30 மணியளவில் ஆளுநா் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. ஆா்.என்.ரவிக்கு சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளாா். நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சா்கள், நீதிபதிகள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com