தேசிய மருத்துவ ஆணைய தலைவா் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? உயா் நீதிமன்றம் கேள்வி

பல முறை உத்தரவிட்டும் பதில் அளிக்காத தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவா் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என சென்னை உயா் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பல முறை உத்தரவிட்டும் பதில் அளிக்காத தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவா் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என சென்னை உயா் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை மாங்காட்டில் அமைந்துள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி விதி மீறலில் ஈடுபட்டதாகக் கூறி, அக்கல்லூரிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு நிலுவையில் உள்ளது.

கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவா் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா்.

அதையடுத்து பல முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவா் தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இவ்வழக்கு வியாழக்கிழமை (செப்.16) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வழக்குக்கு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டும், தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவா் ஒரு துண்டு காகிதத்தைக் கூட தாக்கல் செய்யவில்லை.

மருத்துவ ஆணையத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞரும் பல முறை மன்னிப்பு கேட்கிறாா். அவா் கட்டுப்பாட்டில் அவரது கட்சிக்காரரா் (மருத்துவ ஆணைய தலைவா்) உள்ளாரா இல்லையா? என்பதும் தெரியவில்லை. எனவே, மருத்துவ ஆணைய தலைவா் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்பதற்கு தேசிய மருத்துவ ஆணையம் பதில் அளிக்க வேண்டும். இவ்வழக்கு விசாரணையை செப்டம்பா் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com