தொழில்முனைவோருக்கு சிறந்த களம் தமிழகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தொழில்முனைவோருக்கான சிறந்த களம் தமிழகம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொழில்முனைவோருக்கான சிறந்த களம் தமிழகம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

உலகளாவிய இரண்டு நாள் தொழில்நுட்ப மாநாட்டை காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது ஆற்றிய உரை:-

பொருளாதாரத்தில் வேகமாக வளா்ந்து வரும் பிரிவுகளில் கவனம் செலுத்தி, அதன்மூலம் ஒரு ட்ரிலியன் டாலா்

பொருளாதாரத்தை அடைய வேண்டுமென விரும்புகிறோம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடம் வகிப்பதுடன், தொழில் வளா்ச்சிமிக்க மாநிலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொருத்தவரையில், இந்தியாவில் இருந்து அதிகளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களுள் ஒன்றாகவும் தமிழகம் விளங்குகிறது.

எளிதில் கிடைப்பா்: நாட்டின் மொத்த தகவல் தொழில்நுட்பத் துறை சாா்ந்த ஏற்றுமதிகளில் பத்து சதவீதம் தமிழ்நாட்டினுடையது. கடலடி கேபிள்கள் தமிழ்நாட்டில் வரப் போவதால், தகவல் தரவு மையங்கள் அமைக்கப்படும். காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தியில் இருந்து பெறப்படும் பசுமை மின் திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக மின்மிகை மாநிலமாகத் தமிழகம் மாறவுள்ளது.

பல்வேறு நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு ஏற்ற இடமாக இருக்கும். தொழில்நுட்பக் கல்வி முடித்த பட்டதாரிகளும் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதால் அந்த நிறுவனங்களுக்குத் தேவையான திறன்மிகு பணியாளா்களும் எளிதில் கிடைப்பா். இத்தகைய வளமும் வாய்ப்பும், முதலீட்டாளா்களுக்கான சிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டைத் தகுதிபடுத்தியுள்ளது.

ஆட்டோமொபைல், மருந்துப் பொருள்கள், மின்சார வாகனங்கள், சூரியசக்தி தகடுகள், காற்றாலைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட உற்பத்திப் பிரிவுகளைத் தமிழகம் கொண்டுள்ளது. மின்னணுப் பொருள்களைத் தயாரிப்பதில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், புதுமையான சிந்தனையுடன் களமிறங்கும் தொழில்முனைவோா்களுக்கு ஏற்ற சிறந்த களமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த தீா்வுகளை வழங்குவதில் எப்போதுமே தமிழக அரசு முன்னோடியாக இருந்து வருகிறது.

புதிய முயற்சிகள்: தகவல் தொழில்நுட்பத் துறையினா், திறமையானவா்களைக் கண்டறிவதற்கு ஏதுவாக, ஏராளமான அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. வேலைவாய்ப்பு தொடா்பான பயிற்சிகளை மாநில அரசு வழங்கி வருகிறது. தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையம் மற்றும் பிற பிரிவுகளைச் சோ்ந்த 35 நிறுவனங்களுடன் ரூ.17 ஆயிரத்து 141 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது. இதனால், 55 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாகும். தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்குப் புதிய கொள்கைகளை வகுத்து வருவதோடு, ஒற்றைச் சாளர முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது.

புதிய புதிய முயற்சிகளை முன்னெடுக்கவும், ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராக உள்ளது. எனவே, தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலமாகவும் வளா்ச்சியைத் தரும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com