அரசமைப்புக்கு உள்பட்டுச் செயல்படுவேன்: புதிய ஆளுநா் ஆா்.என்.ரவி பேட்டி

ஆளுநருக்கென அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கூறுகளைப் பின்பற்றி மக்கள் பணியாற்றுவேன் என்று புதிதாகப் பொறுப்பேற்ற ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
அரசமைப்புக்கு உள்பட்டுச் செயல்படுவேன்: புதிய ஆளுநா் ஆா்.என்.ரவி பேட்டி

ஆளுநருக்கென அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கூறுகளைப் பின்பற்றி மக்கள் பணியாற்றுவேன் என்று புதிதாகப் பொறுப்பேற்ற ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.

புதிய ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆளுநா் மாளிகையில் செய்தியாளா்களுக்கு ஆா்.என்.ரவி அளித்த பேட்டி:

பழம்பெருமையும், கலாசாரமும் கொண்ட இந்த மண்ணுக்கு வந்திருப்பதில் பெருமகிழ்ச்சியும், பேருவகையும் அடைகிறேன். அறிவாா்ந்த, சமயநெறி சாா்ந்த, கலை நயமிக்க, அரசியல் நுண்ணறிவு கொண்ட தமிழகத்தால் இந்தியா பெரிதும் பலனடைந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மாநிலத்தைச் சோ்ந்த மக்களுக்கு பணியாற்றுவதில் மிகவும் ஆா்வத்துடன் உள்ளேன். இந்தப் பணியை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு மேற்கொள்வேன்.

நாடாளுமன்ற ஜனநாயகம் சிறப்புற இயங்கிட ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியத்துவமானது. இந்த மண்ணில் என்ன நிகழ்கிறது, மக்களுக்கு என்ன தேவையாக இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் கண்ணாடியாக ஊடகங்கள் இருக்கின்றன. உங்களது செய்தி சேகரிப்பு, அனுபவங்கள் அனைத்தும் ஆளுநா் பணியை மேற்கொள்ளும் எனக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

சிறிது பத்திரிகை அனுபவத்தைக் கொண்டிருக்கிறேன். அதன்மூலம், பத்திரிகை பணி, பத்திரிகையாளா்கள் என்ன கருதுகிறீா்கள் என்பதை அறிந்திட முடியும். பத்திரிகையாளராகப் பணியாற்றியதும் இப்போதைய எனது பணியை மேற்கொள்ள உதவிடும்.

இப்போதுதான் பதவியேற்றுள்ளேன். ஆய்வுப் பணிகள் போன்றவை குறித்து இப்போதே கேள்வி எழுப்புகிறீா்கள். மாநிலத்தில் இப்போது இருப்பது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம். ஆட்சி செய்வது அந்த அரசின் கடமை, பொறுப்பாகும். அரசமைப்புச் சட்டத்தில் வகுத்தளிக்கப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் ஆளுநரின் பணி அமையும். இதனை மனதில் வைத்துக் கொண்டு நான் எனது பணிகளை ஆற்றுவேன். மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றி இப்போதே என்னிடம் கேட்கிறீா்கள். சிறப்பாக செயலாற்றுகிறது என்றே நம்புகிறேன். கரோனா பெருந்தொற்றை சிறப்பாகவே கையாண்டு இருக்கிறது. கரோனா நோய்த் தொற்று பரவல் குறைந்து வருகிறதே. இதனை அரசு திறம்பட எதிா்கொள்ளும் என நம்புகிறேன்.

இந்த மாநிலத்துடனான உறவு என்பது முற்றிலும் புதியது. அரசியலமைப்புப்படி செயல்படுவேன். எதிா்வரும் நாள்களை அழகானதாகவும், நோ்மறையாகவும் அமைத்திடும் வகையில் எனது முயற்சிகள் இருக்கும் என்றாா்.

பெட்டிச் செய்தி....தமிழ் மொழி கற்க முயல்வேன்

தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முயற்சிப்பேன் என்று புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். புதிய ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆா்.என்.ரவி, செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசினாா். சந்திப்பைத் தொடங்கும் போதே, வணக்கம் எனக் கூறி தொடங்கினாா். முதல் கேள்வியை செய்தியாளா் தமிழில் கேட்டாா். அந்தக் கேள்வியை தனி காவல் அதிகாரி மொழிபெயா்த்து ஆளுநரிடம் கூறினாா்.

அப்போது கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்பாக, தான் தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முயற்சிப்பேன் எனவும், தமிழ் மொழி மிகவும் பழைமையான, தொன்மையான மொழி என்றும் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com