மெகா தடுப்பூசி முகாம்: சென்னையில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள்

சென்னையில் இன்று நடத்தப்பட்ட மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 2,01,805 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் இன்று நடத்தப்பட்ட மாபெரும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 2,01,805 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்கள் அனைவரையும் கரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 26.08.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் இல்லங்களுக்கு அருகாமையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்ட காரணத்தினால் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் 200 வார்டுகளில் தடுப்பூசி முகாம்கள் விரிவாக்கம் செய்யப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல்வரின் உத்தரவின்படி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாநகராட்சி பகுதிகளில் 12.09.2021 அன்று 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 
இந்த சிறப்பு முகாம்கள் மூலமாக 98,227 முதல் தவணை தடுப்பூசிகள், 93,123 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 1,91,350 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதேபோன்று பெரிய அளவிலான தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அவ்வப்பொழுது நடத்தப்பட வேண்டும் என அரசு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ள நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மீண்டும் இன்று (19.09.2021) 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை இன்று (19.09.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், இரயில் நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்தும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து அமைச்சர் இராயபுரம் மண்டலம், வார்டு-56, பி.ஆர்.என். கார்டன் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமினையும், வார்டு-60, ராவே குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-173, பசுமை வழி சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மையத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை இன்று (19.09.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தலைமைச் செயலாளர், அடையாறு மண்டலம், வார்டு-173ல் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை, வார்டு-172ல் உள்ள நகர்ப்புற ஆரம்ப
சுகாதார நிலையம், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123 பீமன்னா கார்டன் மற்றும் வார்டு-125 சாந்தோமிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தலைமைச் செயலாளர் தடுப்பூசி மையங்களில்
இருந்த பொதுமக்களிடம் கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துரைத்து கலந்துரையாடினார். மேலும், இதுபோன்ற தீவிர தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்த பெருநகர சென்னை மாநகராட்சி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், இந்த முகாம்களில் இணைந்து பணியாற்றிய சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் குடியிருப்பு நலச்சங்கங்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 18.09.2021 அன்று வரை அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி மையங்களின் வாயிலாக 31,34,803 முதல் தவணை தடுப்பூசிகள், 15,39,539 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 46,74,342 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளின் வாயிலாக 7,64,830 முதல் தவணை தடுப்பூசிகளும் 2,48,695 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் என 10,13,525 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 18.09.2021 அன்று வரை அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மொத்தம் 56,87,867 தடுப்பூசிகள்
செலுத்தப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், இன்று (19.09.2021) நடைபெற்ற 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் 2,01,805 கரோனா தடுப்பூசிகள்
செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா நோய் தொற்றிலிருந்து பாதுபாத்துக்கொள்ள கோவிட் தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்கின்ற நிலையில், பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சியின் சார்பில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த ஆய்வின்போது அரசு முதன்மைச் செயலாளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப.,, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ. விஜயாராணி, இ.ஆ.ப., துணை ஆணையாளர்கள் எஸ். மனிஷ், இ.ஆ.ப., (சுகாதாரம்), விஷு ம.காஜன் இ.ஆ.ப., (வருவாய் மற்றும் நிதி), டி.சினேகா இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்), சிம்ரன்ஜித் சிங் கோஹ்லன், இ.ஆ.ப., (தெற்கு வட்டாரம்), மாநகர நல அலுவலர், மாநகர மருத்துவ அலுவலர் மற்றும் மண்டல அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com